சிவகங்கை அருகே அரசு பஸ்-மினி லாரி மோதல்; ஒருவர் சாவு 4 பேர் படுகாயம்

சிவகங்கை அருகே அரசு பஸ் மீது மினி லாரி மோதியதில் டிரைவர் பலியானார். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
சிவகங்கை அருகே அரசு பஸ் மீது மினி லாரி மோதியதில் டிரைவர் பலியானார். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
பஸ்-மினி லாரி மோதல்
சிவகங்கையில் இருந்து மதுரை நோக்கி அரசு பஸ் ஒன்று சென்றது. அந்த பஸ் சிவகங்கையை அடுத்த பனையூர் விலக்கு அருகே சென்ற போது எதிரே மினி லாரி வந்தது. எதிர்பாராத விதமாக பஸ்சும் மினிலாரியும் மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் மினி லாரியின் பின்பகுதி இரண்டாக துண்டித்து தனியாக சென்று விழுந்தது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த மினி லாரி டிரைவர் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தைச் சேர்ந்த சங்கர் (35) என்பவரை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு தூக்கி சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சங்கர் பரிதாபமாக இறந்தார்.
4 பேர் படுகாயம்
இந்த விபத்தில் பஸ் டிரைவர் சார்லஸ் (40), பஸ்சில் பயணம் செய்த திருப்புவனத்தை சேர்ந்த திவ்யா (28), சிவகங்கையை சேர்ந்த சுபலட்சுமி (19), சிவகங்கை இந்திரா நகரைச் சேர்ந்த கலா ராணி (59) ஆகிய 4 பேர் காயமடைந்தனர். அவர்கள் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் மாவட்ட போக்குவரத்து அலுவலர் மூக்கன், சிவகங்கை துணை சூப்பிரண்டு சிபி சாய் சவுந்தர்யன், தாலுகா இன்ஸ்பெக்டர் ஆதிலிங்க போஸ், சப்-இன்ஸ்பெக்டர் பிரதாப் மற்றும் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இது தொடர்பாக சிவகங்கை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






