மோட்டார் சைக்கிள்கள் மோதல்; பள்ளி ஊழியர் பலி
திண்டுக்கல் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் பள்ளி ஊழியர் பலியானார்.
திண்டுக்கல் அருகே உள்ள காப்பிளியபட்டியை சேர்ந்தவர் வடிவேல் (வயது 45). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் கணக்காளராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வடிவேல் தனது மோட்டார் சைக்கிளில் முள்ளிப்பாடியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார். மா.மு.கோவிலூர் பிரிவு அருகே அவர் வந்தபோது, எதிரே வந்த திண்டுக்கல் ஆர்.எம்.காலனியை சேர்ந்த காளீஸ்வரன் (26) என்பவர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட வடிவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காளீஸ்வரன் படுகாயம் அடைந்தார்.
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் காளீஸ்வரனை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், சப்-இன்ஸ்பெக்டர் அருண் நாராயணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, வடிவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான வடிவேலுக்கு கார்த்திகா (32) என்ற மனைவியும், யாகேஷ் (11) என்ற மகனும், சுபாஷினி (8) என்ற மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.