சேத்தியாத்தோப்பில் விபத்து:பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி அந்தரத்தில் தொங்கிய அரசு பஸ்;கண்ணாடியை உடைத்து 40 பயணிகள் மீட்பு


சேத்தியாத்தோப்பில் விபத்து:பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி அந்தரத்தில் தொங்கிய அரசு பஸ்;கண்ணாடியை உடைத்து 40 பயணிகள் மீட்பு
x
தினத்தந்தி 26 Sept 2023 12:15 AM IST (Updated: 26 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சேத்தியாத்தோப்பில் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதிய அரசு பஸ் அந்தரத்தில் தொங்கியபடி நின்றது. இதனால் கண்ணாடியை உடைத்து 40 பயணிகள் மீட்கப்பட்டனர்.

கடலூர்

சேத்தியாத்தோப்பு,

அரசு விரைவு பஸ்

சென்னையில் இருந்து நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு கும்பகோணம் நோக்கி அரசு விரைவு பஸ் ஒன்று புறப்பட்டது. பஸ்சை திருவாரூர் மாவட்டம் சந்திரசேகரபுரம் கிராமத்தை சேர்ந்த வீரமணி (வயது 54) என்பவர் ஓட்டினார். சுமார் 40 பேர் அதில் பயணம் செய்தனர்.

அந்த பஸ், நேற்று நள்ளிரவு 12.30 மணி அளவில் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே சென்னிநத்தம் குறுக்கு சாலை வெள்ளாற்று மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது.

பாலத்தில் மோதியது

அப்போது, டிரைவர் வீரமணியின் கட்டுப்பாட்டை இழந்து, பாலத்தின் தடுப்பு சுவர் மீது பஸ் மோதியது. சிறிது தூரத்துக்கு தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு சென்று, பஸ்சின் முன்பகுதி மட்டும் பாலத்தில் அந்தரத்தில் தொங்கியப்படி நின்றது. இதனால் அயர்ந்த தூக்கத்தில் இருந்த பயணிகள் கூச்சலிட்டனர்.

மேலும், அவர்கள் வெளியே வரும் முயற்சியில் ஈடுபட்ட போது, முன்பக்க படிக்கட்டு பாலத்தில் அந்தரத்தில் தொங்கிய நிலையில் பஸ் நின்றதால் அவர்களால் உடனடியாக கீழே இறங்கி வர முடியவில்லை. இதனால் பரிதவிப்புக்கு உள்ளாகியதால், பதற்றத்தில் அவர்கள் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு, பாலத்தின் கீழ் பகுதியில் வசிக்கும் மக்கள், அங்கு சென்று பஸ்சின் கண்ணாடியை உடைத்து, பயணிகளை வெளியே மீட்டனர்.

மாற்று பஸ் வரவழைப்பு

இதற்கிடையே தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் சேதுபதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாரும் காயம் அடையவில்லை.

மீட்கப்பட்ட பயணிகளை மாற்று பஸ் மூலம் போலீசார் அங்கிருந்து அனுப்பி வைத்ததுடன், மீட்பு வாகனத்தை கொண்டு வந்து, அந்தரத்தில் தொங்கியபடி நின்ற பஸ்சை அவர்கள் மீட்டனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story