வெவ்வேறு இடங்களில் விபத்து: வாலிபர் உள்பட 2 பேர் பலி
வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்தில் வாலிபர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
கிணத்துக்கடவு
வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்தில் வாலிபர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
சாலையோர கம்பியில் மோதல்
கிணத்துக்கடவு அருகே உள்ள மூட்டாம்பாளையத்தை சேர்ந்தவர் வீரமுத்து. இவரது மனைவி காமாட்சி. இவர்களது மகன் மோகன்தாஸ் வயது (17). இவர் நேற்று முன்தினம் தனது தாயிடம் மலுமிச்சம்பட்டியில் உள்ள தனது நண்பரை பார்க்க செல்வதாக நண்பர் ஒருவரது மோட்டார் சைக்கிளை வாங்கி சென்றார். நண்பனை பார்த்துவிட்டு இரவு மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தார். கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் கிணத்துக்கடவு அடுத்துள்ள கோதவாடி பிரிவு தாண்டி சென்ற போது, மோட்டார் சைக்கிள், திடீரென சாலையோர கம்பியில் மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட மோகன்தாஸ் படுகாயம் அடைந்தார்.
இதனை கவனித்த அக்கம்பக்கத்தினர் அவரை சிகிச்சைக்காக ஆம்புலன்சில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிகிச்சைக்கு வரும் வழியிலேயே மோகன்தாஸ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார் மோதி தொழிலாளி பலி
இதேபோல் பொள்ளாச்சி அருகே மண்னூரைச் சேர்ந்தவர் கருப்புசாமி (52). தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் மாலை அருகில் உள்ள சண்முகவேல் என்பவர் தோட்டத்தில் வேலை பார்த்துவிட்டு மொபட்டில் வீடு திரும்பி கொண்டிருந்தார். ஜலத்தூர் பிரிவு அருகே சென்றபோது பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த சங்கர் கண்ணன் (41) என்பவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் கீழே விழுந்த கருப்புசாமி மீது ஒத்தக்கால் மண்டபத்தைச் சேர்ந்த சக்திவேல், (27) என்பவர் ஓட்டிவந்த கார் பயங்கரமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த கருப்புசாமி பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கருப்புசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பொள்ளாச்சி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.