தூத்துக்குடி கோட்ட தபால் நிலையங்களில்குறைந்த பிரீமியத்தில் விபத்து காப்பீடு திட்ட சிறப்பு முகாம்


தினத்தந்தி 20 Jan 2023 12:15 AM IST (Updated: 20 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி கோட்ட தபால் நிலையங்களில் குறைந்த பிரீமியத்தில் விபத்து காப்பீடு திட்டத்துக்கான சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி

தூத்துக்குடி கோட்ட தபால் நிலையங்களில் குறைந்த பிரீமியத்தில் விபத்து காப்பீடு திட்டத்துக்கான சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இது குறித்து தூத்துக்குடி கோட்ட தபால் கண்காணிப்பாளர் மு.பொன்னையா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-

காப்பீடு திட்டம்

தபால் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்டல் பேமெண்ட் வங்கியானது, டாடா ஏஜஜி ஜெனரல் இன்சூரன்சு, பஜாஜ் அலையன்ஸ், ஜெனரல் இன்சூரன்சு ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து ஆண்டுக்கு ரூ.399, ரூ.396 பிரீமியத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. சாமானிய மக்களுக்கும் விபத்து காப்பீட்டு திட்டங்களின் பலன்கள் சென்றடையும் வகையில் நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் உள்ள தபால் அலுவலகங்கள் (தபால்காரர்/ கிராம அஞ்சல் ஊழியர்கள்) மூலம் மிக குறைந்த பிரீமியம் தொகையுடன் கூடிய இந்த விபத்து காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அனைத்து தபால் அலுவலகங்களிலும் இதற்கான சிறப்பு முகாம்கள் இந்த மாதம் முழுவதும் நடத்தப்படுகிறது. இந்தவிபத்து காப்பீட்டுத் திட்டத்தில் 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் இணையலாம். விண்ணப்ப படிவம், அடையாள, முகவரி சான்றின் நகல்கள் போன்ற எந்தவிதமான காகித பயன்பாடுமின்றி தபால்காரர் கொண்டு வரும் ஸ்மார்ட் போன் அல்லது விரல் ரேகை கருவி மூலம் 5 நிமிடங்களில் முற்றிலும் டிஜிட்டல் முறையில் இந்த பாலிசி வழங்கப்படுகிறது.

பயன்கள்

விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பு, நிரந்தர முழு ஊனம், நிரந்தர பகுதி ஊனம் அல்லது பக்கவாதம் ஆகியவைகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீடு வழங்கப்படும். விபத்தினால் பாதிக்கப்பட்டு உள்நோயாளியாக சிகிச்சை பெறுவோர் மருத்துவ செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ.60 ஆயிரம் வரையிலும், புறநோயாளியாக சிகிச்சை பெறுவோர் மருத்துவ செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ.30 ஆயிரம் வரையிலும் வழங்கப்படும். விபத்தினால் மரணம், ஊனம் அல்லது பக்கவாதம் ஏற்பட்டவரின் குழந்தைகளின் (அதிகபட்சம் 2 குழந்தைகள்) கல்வி செலவுகளுக்கு ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும். விபத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நாள்களுக்கு, தினப்படி தொகையாக ஒரு நாளைக்கு ரூ.1000 என 10 நாட்களுக்கு (1 நாள் கழிக்கப்படும்) வழங்கப்படும். விபத்தில் பாதிக்கப்பட்டவரை பார்க்க பயணிக்கும் குடும்பத்தினருக்கு பயண செலவாக அதிகபட்சம் ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும். விபத்தினால் உயிரிழந்தவருக்கு இறுதி சடங்கு செய்ய ரூ.5000 வரை வழங்கப்படும். இந்த விபத்து காப்பீட்டு திட்டத்தில் பொதுமக்கள் சேர்ந்து பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story