ஆலங்குளம் அருகே விபத்து; சார்பதிவாளர் அலுவலக ஊழியர், தொழிலாளி பரிதாப சாவு


ஆலங்குளம் அருகே சைக்கிள் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சார்பதிவாளர் அலுவலக ஊழியர், தொழிலாளி பரிதாபமாக இறந்தனர்.

தென்காசி

சுரண்டை:

ஆலங்குளம் அருகே சைக்கிள் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சார்பதிவாளர் அலுவலக ஊழியர், தொழிலாளி பரிதாபமாக இறந்தனர்.

கூலி தொழிலாளி

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள முத்துகிருஷ்ணபேரி கிராமத்தை சேர்ந்தவர் அரி கிருஷ்ணன் (வயது 42), கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு அத்தியூத்து- சுரண்டை ரோட்டில் அமைந்துள்ள ஒரு வணிக வளாகத்துக்கு சென்று, வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கிக் கொண்டு சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார்.

அவர் அங்குள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே ஒரு திருப்பத்தில் வந்தபோது, தென்காசி ரெயில் நகரை சேர்ந்த ராமலிங்கம் மகன் மதிபிரவீன் (20) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக அவரது சைக்கிள் மீது மோதியது. இதில் அரிகிருஷ்ணனும், மதிபிரவீனும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர்.

2 பேர் சாவு

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வீரகேரளம்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அரிகிருஷ்ணனை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையிலும், மதிபிரவீனை தென்காசியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி மதிபிரவீன் பரிதாபமாக இறந்தார். மேலும் அரிகிருஷ்ணனும் இறந்துவிட்டார்.

மாற்றுப்பாதையில் சென்றபோது...

மதிபிரவீன் ஆலங்குளத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அவர் தினமும் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று வந்தார். தற்போது நெல்லை-தென்காசி இடையே 4 வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருவதால், அந்த வழியாக செல்லாமல் சுரண்டை, சாம்பவர்வடகரை வழியாக மாற்றுப்பாதையில் சென்று வந்தார்.

நேற்று முன்தினமும் அவர் வேலை முடிந்து அந்த வழியாக சென்றபோது விபத்தில் சிக்கி இறந்தது தெரியவந்து உள்ளது. சைக்கிள் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சார்பதிவாளர் அலுவலக ஊழியரும், தொழிலாளியும் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பொதுமக்கள் கோரிக்கை

முத்துகிருஷ்ணாபேரி பஸ் நிறுத்தத்துக்கு தென்புறம் சாலையில் வளைவு ஒன்று உள்ளது. அங்கு எதிரில் வரும் வாகனங்கள் சரிவர தெரியாததால் இதுபோன்று அடிக்கடி விபத்துகள் நடந்து வருகின்றன. எனவே அங்கு எச்சரிக்கை பலகை வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story