கிணத்துக்கடவு நான்கு வழிச்சாலையில் விபத்து: ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் லாரி மோதி பலி
கிணத்துக்கடவு நான்கு வழிச்சாலையில் ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் லாரி மோதி பரிதாபமாக இறந்தார்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு நான்கு வழிச்சாலையில் ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் லாரி மோதி பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள திவான்சாபுதூர் கல்யாண மண்டபம் வீதீயை சேர்ந்தவர் சண்முகம் (வயது 70). இவர் ஓய்வுபெற்ற ரெயில்வே துறை ஊழியர். இவர் தனது மொபட்டில் கோவை அருகே உள்ள சூலூர் கல்பாவிஹார், இந்திய விமானப்படை குடியிருப்பில் வசிக்கும் மகன் மணி (42) என்பவர் கட்டி வரும் புது வீட்டை பார்வையிடுவதற்காக சென்று கொண்டு இருந்தார். அந்த மொபட்டில் முன்பக்கம் தேங்காய் மூட்டையை வைத்துக்கொண்டு கிணத்துக்கடவு- கோவை நான்கு வழி சாலையில் சென்றார். அப்போது பின்னால் சமையல் கியாஸ் சிலிண்டர்களை ஏற்றி வந்த லாரி ஒன்று சண்முகம் சென்ற மொபட் மீது மோதியது.
சம்பவ இடத்திலேயே பலி
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சண்முகம் படுகாயம் அடைந்து ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார், சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் விபத்தில் பலியான சண்முகம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும். லாரியை ஓட்டி வந்த கிணத்துக்கடவு அருகே உள்ள குருநல்லி பாளையத்தை சேர்ந்த ராமசாமி என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.