நெல்லை ஈரடுக்கு மேம்பாலத்தில் விபத்து: மோட்டார்சைக்கிளில் சென்ற 2 நண்பர்கள் பரிதாப சாவு


நெல்லை ஈரடுக்கு மேம்பாலத்தில் கன்டெய்னர் லாரி, மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் நண்பர்கள் 2 பேர் பலியானார்கள்.

திருநெல்வேலி

நெல்லை ஈரடுக்கு மேம்பாலத்தில் கன்டெய்னர் லாரி, மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் நண்பர்கள் 2 பேர் பலியானார்கள்.

ஈரடுக்கு மேம்பாலம்

நெல்லை அருகே பேட்டை மில்கேட் பகுதியை சோ்ந்தவர் ரமேஷ். இவருடைய மகன் மணிகண்டன் (வயது 22). ஆட்டோ டிரைவர். இவரும், நெல்லை சந்திப்பு கைலாசபுரத்தை சேர்ந்த பிளம்பர் சங்கரபாண்டியனும் (27) நண்பர்கள்.

இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் நெல்லை டவுன் பகுதியில் சாப்பிட்டனர். பிறகு நெல்லை சந்திப்பு நோக்கி மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை சங்கரபாண்டியன் ஓட்டினார்.

2 பேரும் பலி

மோட்டார்சைக்கிள் சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தில் வந்து கொண்டு இருந்தது. அப்போது தூத்துக்குடியில் இருந்து தென்காசி நோக்கி டைல்ஸ் கற்கள் ஏற்றிக்கொண்டு ஒரு கன்டெய்னர் லாரியும் ஈரடுக்கு மேம்பாலத்தில் வந்து கொண்டு இருந்தது. எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளும், கன்டெய்னர் லாரியும் நேருக்கு நேராக மோதிக்கொண்டன.

இந்த பயங்கர விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த சங்கரபாண்டியன் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். மணிகண்டன் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

சோகம்

இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை சந்திப்பு மற்றும் மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் அங்கு வந்து படுகாயம் அடைந்த மணிகண்டனை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், லாரி டிரைவரான தூத்துக்குடி மாவட்டம் தெய்வச்செயல்புரத்தை சேர்ந்த சுப்பையா மகன் மாரியப்பனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் நண்பர்கள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story