வால்பாறையில் சுற்றுலா பயணிகளுக்கு விபத்து தடுப்பு விழிப்புணர்வு
வால்பாறையில் சுற்றுலா பயணிகளுக்கு விபத்து தடுப்பு குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
வால்பாறை
வால்பாறையில் சுற்றுலா பயணிகளுக்கு விபத்து தடுப்பு குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
விழிப்புணர்வு முகாம்
வால்பாறை, முடீஸ், காடம்பாறை, சேக்கல்முடி போலீசார் சார்பில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் விபத்து தடுப்பு குறித்து தினந்தோறும் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வால்பாறை பகுதிக்கு சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகள் போல் சிலர் கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்கள் கொண்டு வந்து வால்பாறை பகுதியில் விற்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக நேற்று வால்பாறை அருகில் உள்ள முடீஸ் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட நல்லமுடி பூஞ்சோலை பள்ளத்தாக்கு காட்சி முனை பகுதிக்கு சுற்றுலா வந்த சுற்றுலா பயணிகளுக்கு ஆனைமுடி எஸ்டேட் பகுதியில் முடீஸ் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையில் போலீசார் விழிப்புணர்வு முகாம் நடத்தினார்.
மிதமான வேகம்
குறிப்பாக 2 சக்கர வாகனங்களில் வரக்கூடிய சுற்றுலா பயணிகள் போதைப்பொருட்களை பயன்படுத்திக் கொண்டு வாகனங்களை ஒட்டக்கூடாது. மலைப்பாதை சாலையில் கவனமாகவும் மிதமான வேகத்திலும் வாகனங்களை ஓட்டவேண்டும். வால்பாறை பகுதியில் குட்கா போன்ற போதைப் பொருட்கள் உங்களுக்கு யாராவது விற்பனை செய்தால் அது குறித்து அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்க வேண்டும்.
கார், வேன்களில் சுற்றுலா வரக்கூடிய சுற்றுலா பயணிகள் வழியில் உங்களை யாராவது நிறுத்தி வழியில் இறங்கி கொள்வதாக கூறி லிப்ட் கேட்டால் முன்பின் தெரியாத நபர்களை வாகனத்தில் ஏற்றவேண்டாம். அந்த நபர் சந்தேகப்படும்படியாக இருந்தால் அந்த நபரை குறித்தும் அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகளுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.