ஊட்டி -மேட்டுப்பாளையம் சாலையில் ஸ்கூட்டரில் சென்றபோது விபத்து:100 அடி பள்ளத்தில் விழுந்து ரியல் எஸ்டேட் புரோக்கர் சாவு


ஊட்டி -மேட்டுப்பாளையம் சாலையில் ஸ்கூட்டரில் சென்றபோது விபத்து:100 அடி பள்ளத்தில் விழுந்து ரியல் எஸ்டேட் புரோக்கர் சாவு
x
தினத்தந்தி 21 Feb 2023 12:15 AM IST (Updated: 21 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி- மேட்டுப்பாளையம் சாலையில் ஸ்கூட்டரில் சென்றபோது 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்த ரியல் எஸ்டேட் புரோக்கர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நீலகிரி

குன்னூர்

ஊட்டி- மேட்டுப்பாளையம் சாலையில் ஸ்கூட்டரில் சென்றபோது 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்த ரியல் எஸ்டேட் புரோக்கர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ரியல் எஸ்டேட் புரோக்கர்

நீலகிரி மாவட்டம் ஊட்டி சவுத்வீக் பகுதியை சேர்ந்தவர் மரியதாஸ் வேதமுத்து (வயது 45) ரியல் எஸ்டேட் புரோக்கர். இவரது மனைவி மேரி. இவர்களுக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். மரியதாஸ் வேதமுத்து விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டைக்கு பஸ் மூலம் சென்று விட்டு நேற்று அதிகாலை ஊருக்கு திரும்பினார். இதில் மேட்டுப்பாளையம் வந்துவிட்டு அங்கு ஏற்கனவே நிறுத்தி இருந்த தனது ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு ஊட்டிக்கு புறப்பட்டார்.

குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் நந்தகோபால் பாலம் அருகில் வந்தபோது சாலை வளைவில் எதிர்பாராதவிதமாக மோதி 100 அடி பள்ளத்தில் விழுந்து விட்டார். ஸ்கூட்டர் சாலையோரம் சிக்கி நின்றுவிட்டது.

ரத்த வெள்ளத்தில் சாவு

மரியதாஸ் வேதமுத்து பாறை மீது விழுந்ததில் தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். அந்த இடத்தில் தண்ணீர் வந்து கொண்டிருந்ததால் அவரது உடலை கொஞ்ச தூரம் இழுத்து செல்லப்பட்டது. அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள், இருசக்கர வாகனம் சாலையோரம் விபத்துக்குள்ளாகி கிடைப்பதை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். நெடுஞ்சாலை ரோந்து வாகன சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் குன்னூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இதன்பேரில் குன்னூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன் தலைமையிலான குழுவினர், சப்- இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

இதைத்தொடர்ந்து பள்ளத்தில் விழுந்துகிடந்த மரியதாஸ் வேதமுத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக மரியதாஸ் வேதமுத்து ஸ்கூட்டரின் முன் பகுதியில் தலைக்கவசத்தை வைத்து பயணம் செய்துள்ளார். ஒருவேளை தலைக்கவசத்தை அணிந்து இருந்தால் உயிர் பிழைத்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.



Next Story