போக்குவரத்து விதிகளை பின்பற்றினால் விபத்துகளை தவிர்க்கலாம்


போக்குவரத்து விதிகளை பின்பற்றினால் விபத்துகளை தவிர்க்கலாம்
x

வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை பின்பற்றினால் விபத்துகளை தவிர்க்கலாம் என்று வேலூர் சரக துணை போக்குவரத்து கமிஷனர் நெல்லையப்பன் கூறினார்.

வேலூர்

விழிப்புணர்வு முகாம்

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) வெங்கடேசன், கிருஷ்ணகிரி-வாலாஜா சுங்கச்சாவடி செயல் அலுவலர் ஜஸ்டின்சாம்ராஜ், தேசிய நெடுஞ்சாலைத்துறை என்ஜினீயர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம் வரவேற்றார். முகாமிற்கு வேலூர் சரக துணை போக்குவரத்து கமிஷனர் நெல்லையப்பன் தலைமை தாங்கி பேசியதாவது:-

விபத்துகளை தவிர்க்கலாம்...

தமிழகத்தில் அதிகளவு சாலை விபத்துகள் நடைபெறுகிறது. அதற்கு வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்காததே முக்கிய காரணமாகும். செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டக்கூடாது என்று பல முறை அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் பெரும்பாலானோர் அதனை பொருட்படுத்தாமல் செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுகிறார்கள். வாகனம் ஓட்டும்போது செல்போன் அழைப்பு வந்தால் சாலையோரம் நிறுத்தி பேச வேண்டும்.

அதேபோன்று அதிவேகத்தில் வாகனங்களை இயக்கக் கூடாது. போக்குவரத்து விதிகளை பின்பற்றி வாகனங்கள் ஓட்டினால் விபத்துகளை தவிர்க்கலாம்.

இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து அவர், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது, சீட் பெல்ட் அணிந்து கார் ஓட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை வாகன ஓட்டிகளுக்கு வழங்கினார். மேலும் வாகனங்களுக்கு இரவில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டன. இதில் மாநில நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சம்பத்குமார், பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் ஆட்டோ, கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகன டிரைவர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் குடியாத்தம் மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜேஷ்கண்ணா நன்றி கூறினார்.


Next Story