கடுமையான அபராத விதிப்பின் மூலம் மட்டுமே விபத்துகளை தடுத்து விட முடியாது - கே.பாலகிருஷ்ணன்
கடுமையான அபராத விதிப்பின் மூலம் மட்டுமே விபத்துகளை தடுத்து விட முடியாது என கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருத்தப்பட்ட வாகன சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும், அதைத் தொடர்ந்து போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதமும் கடுமையாக உயர்த்தப்படுவதாகவும் தமிழக அரசின் சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தகைய அறிவிப்பானது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதிகரித்து வரும் சாலை விபத்துக்களையும், உயிரிழப்புகளையும் தடுப்பதற்காகவே இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக சொன்னாலும் கூட, இத்தகைய அபராத விதிப்பின் மூலம் மட்டுமே விபத்துகளை தடுத்து விட முடியாது.
தேவையான போக்குவரத்து கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்வதன் மூலமே விபத்து மற்றும் உயிரிழப்பு விகிதங்களை குறைக்க முடியும். எனவே, மிகக் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ள அபராத கட்டண விகிதங்களை முழுமையாக கைவிட வேண்டும். போக்குவரத்து சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பிரசாரங்களை கூடுதலாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.