சாலை தடுப்பில் சரக்கு வாகனம் மோதி விபத்து


சாலை தடுப்பில் சரக்கு வாகனம் மோதி விபத்து
x
திருப்பூர்


தாராபுரம்-அலங்கியம் ரவுண்டானா பகுதியில் சாலை தடுப்பில் சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர், கிளீனர் காயம் அடைந்தனர்.

இது குறித்து ேபாலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சரக்கு வாகனம்

திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் மில்லில் இருந்து கோவையில் உள்ள மில்லுக்கு சாயம் போட்ட காடா துணி பைகளை ஏற்றிக் கொண்டு சரக்கு வாகனம் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த சரக்கு வாகனத்தை தாமரபாடியை சேர்ந்த பரமசாமி (வயது 45) என்பவர் ஓட்டினார். அவருடன் கிளீனர் சுப்பிரமணி அமர்ந்து இருந்தார்.

இந்த .சரக்கு வாகனம் திண்டுக்கல் -தாராபுரம் பைபாஸ் சாலை அலங்கியம் ரவுண்டானா அருகே வந்தது. அப்போது சரக்கு வாகனத்திற்கு முன்னால் லாரி ஒன்று சென்றது. அந்த லாரியை முந்தி செல்ல சரக்கு வாகனம் முயன்றது. அப்போது எதிர்பாராத விதமாக லாரியின் பக்க வாட்டில் மோதிய சரக்கு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதியது. இந்த விபத்தில் சரக்கு வாகனத்தில் இருந்த துணி பண்டல்கள் சாலையில் சிதறிக்கிடந்தன. மேலும் விபத்தில் டிரைவரும், கிளீனரும் இடர்பாடுகளில் சிக்கி தவித்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போக்குவரத்து நெரிசல்

சரக்கு வேன் கவிழ்ந்ததால் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இது குறித்து தகவல் அறிந்த தாராபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பிறகு போக்குவரத்து போலீசார் கிரேன் மூலம் வேனை தூக்கி நிறுத்தினர். பிறகு போக்கு வரத்தை போலீசார் சீர் செய்தனர். இதில் சரக்கு வாகன ஓட்டுனர் மற்றும் கிளீனர் இருவரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். சம்பவம் குறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story