மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலி


மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலி
x
திருப்பூர்


முத்தூர் அருகே மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மோட்டார்சைக்கிளில் சென்றார்

ஈரோடு மாவட்டம், சிவகிரி, நெடுஞ்செழியன் தெருவை சேர்ந்தவர் பாபு. தையல் கடைக்காரர். இவர் தனது குடும்பத்தினருடன் திருப்பூர் மாவட்டம், முத்தூர், ஈஸ்வரன் கோவில் வீதியில் வசித்து வருகிறார். இவரது மகன் கவுதம் (வயது 27).

இந்த நிலையில் கவுதம் நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு முத்தூரில் இருந்து சிவகிரிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

இவர் முத்தூர் - ஈரோடு சாலை தண்ணீர் பந்தல் பஸ் நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி திடீரென்று நிலைதடுமாறி எதிர்பாராதவிதமாக கவுதம் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

வாலிபர் பலி

இந்த விபத்தில் தலையில் பலத்த அடிபட்டு கிடந்த கவுதமை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு கவுதமை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது பற்றிய புகாரின் பேரில் வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story