கோர்ட்டு பரிந்துரையின்படி மது விற்பனை நேரத்தை குறைக்க வேண்டும் -ராமதாஸ் வலியுறுத்தல்
கோர்ட்டு பரிந்துரையின்படி மது விற்பனை நேரத்தை குறைக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் அரசு மதுக்கடைகளின் மது விற்பனை நேரத்தை 6 மணி நேரமாக குறைக்க வேண்டும், மது அருந்துவதற்கு உரிமம் பெறும் முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் சென்னை ஐகோர்ட்டின் மதுரை அமர்வு பரிந்துரை வழங்கியுள்ளது. பா.ம.க. எதிர்ப்பார்ப்புக்கு இது குறைவு தான் என்றாலும், முழு மதுவிலக்கை ஏற்படுத்துவதற்கு நல்ல தொடக்கமாக இருக்கும் என்ற அடிப்படையில் தீர்ப்பு வரவேற்கத்தக்கதாகும்.
பா.ம.க.வை பொறுத்தவரை ஒரு சொட்டு மது கூட இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பது தான் நிலைப்பாடு. அதற்காகத் தான் கடந்த 42 ஆண்டுகளாக தொடர்ச்சியாக நான் போராடி வருகிறேன். தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படும் போதெல்லாம், 2021 தேர்தலில் அது குறித்த வாக்குறுதியை தி.மு.க. அளிக்கவில்லை என்று கூறி அரசு நழுவிக்கொள்கிறது. எனவே, கோர்ட்டு பரிந்துரைத்தவாறு தமிழகத்தில் மது விற்பனையை 6 மணி நேரமாக குறைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.