நிலத்திற்கான இழப்பீட்டை அரசாணை படி 10 மடங்கு வழங்க வேண்டும்

உயர்மின் கோபுர வழித்தடங்களுக்கு நிலத்திற்கான இழப்பீட்டை அரசாணை படி 10 மடங்கு வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் திருவண்ணாமலை மாவட்டம் சார்பில் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் திருவண்ணாமலை வேங்கிக்கால் ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக வந்து கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் பலராமன் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் வெங்கடேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சிவக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரபத்திரன், ஒன்றிய செயலாளர் ராமதாஸ், வக்கீல் அபிராமன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பிரகலநாதன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சண்முகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
இதில் உயர்மின் கோபுரம் வழித்தடங்களுக்கு நிலத்திற்கான இழப்பீட்டை அரசாணை 54-ன் படி 10 மடங்கு வழங்க வேண்டும்.
மாவட்டம் முழுவதும் 2-ம் போகம் நெல் விளைச்சல் முழுவதையும் அரசே நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறந்து அனைத்து நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும். கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் விவசயிகளுக்கு பயிர்க்கடன், நகைக்கடன் முறைகேடின்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதில் விவசாயிகள் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.