பிரேத பரிசோதனை அறிக்கையின்படி மாணவி ஸ்ரீமதி கொலை செய்யப்படவில்லை -ஐகோர்ட்டு கருத்து


பிரேத பரிசோதனை அறிக்கையின்படி மாணவி ஸ்ரீமதி கொலை செய்யப்படவில்லை -ஐகோர்ட்டு கருத்து
x

பிரேத பரிசோதனை அறிக்கையின்படி கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆதாரமே இல்லை என்று பள்ளி தாளாளர் உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்கிய உத்தரவில் சென்னை ஐகோர்ட்டு கூறியுள்ளது.

சென்னை,

கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட, அந்த பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி தலைமை ஆசிரியர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேருக்கு கடந்த 26-ந் தேதி சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஜி்.கே.இளந்திரையன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார், அந்த உத்தரவு நேற்று வெளியானது. அதில் நீதிபதி கூறியிருப்பதாவது:-

மாணவி மரணம் குறித்து முதலில் சந்தேகச் சாவு என்று வழக்குப்பதிவு செய்த போலீசார், பின்னர் அந்த வழக்கில், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 305, (மைனர் பெண்ணை தற்கொலைக்கு தூண்டுதல்) போக்சோ மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவுகளை சேர்த்துள்ளனர்.

ஆதாரம் இல்லை

பிரேத பரிசோதனை அறிக்கைகள் மற்றும் ஜிப்மர் மருத்துவமனை நிபுணர்களின் கருத்தின்படி, மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்படவில்லை என்று மாநிலஅரசு தலைமை குற்றவியல் வக்கீல் கூறினார். மரணம் அடைந்த மாணவியின் உடல் இருமுறை பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஜிப்மர் மருத்துவமனை டாக்டர்கள் அந்த அறிக்கைகளை ஆய்வு செய்து அறிக்கை கொடுத்துள்ளனர்.

இந்த ஆவணங்களை பார்க்கும்போது, மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆதாரமே இல்லை.

மாணவிகள் வாக்குமூலம்

பிளஸ்-2 படிப்பு என்பது மாணவர்களின் எதிர்காலத்துக்கு முக்கியமானது. அதனால்தான், பெற்றோர் பலர் தங்களது பிள்ளைகளை உறைவிட பள்ளியில் சேர்க்கின்றனர். குடும்ப சூழ்நிலை குறித்து சிந்திக்காமல், தன் மனதை படிப்பில் செலுத்தி நன்றாக பிள்ளைகள் படிப்பார்கள் என்று பெற்றோர் நினைக்கின்றனர்.

அதுமட்டுமல்ல, நல்ல கல்லூரியில் இடம் கிடைக்க வேண்டும் என்றால், நன்றாக படிக்க வேண்டும் என்றும் பிள்ளைகளை கட்டாயப்படுத்துகின்றனர். அப்படித்தான் இந்த வழக்கிலும், மாணவியின் பெற்றோர் நினைத்துள்ளனர். சக மாணவிகள் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், கடந்த ஜூலை 12-ந்தேதி வேதியியல் சமன்பாட்டை மரணம் அடைந்த மாணவியால் எழுத முடியவில்லை. அதனால், வேதியியல் ஆசிரியை, மாணவிக்கு அறிவுரை வழங்கினார். விடுதி மாணவிகளை கவனித்து வரும் கணித ஆசிரியையிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்தார் என்று கூறியுள்ளனர்.

உடல் காயங்கள்

மாணவியின் உடலில் உள்ள காயங்கள், 3-வது மாடியில் இருந்து குதித்ததால் ஏற்பட்டு இருக்கலாம் என்று மருத்துவர் கூறியுள்ளனர். 3-வது மாடியில் ரத்தக்கறை இருந்தது என்ற குற்றச்சாட்டு குறித்து ஆய்வு செய்த நிபுணர்கள், அது சிவப்பு நிற பெயிண்ட் என்றும் கூறியுள்ளனர்.

மாணவி எழுதி வைத்துள்ள தற்கொலை கடிதத்தில், ஆசிரியைகள் உள்ளிட்ட மனுதாரர்கள் 5 பேரும் தற்கொலைக்கு தூண்டியதாக எதுவும் கூறவில்லை.

மாணவர்களை நன்றாக படி என்று அறிவுரை கூறிய ஆசிரியர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது துரதிருஷ்டவசமானது.

தற்கொலைக்கு தூண்டவில்லை

மாணவர்களை நன்றாக படிக்க வேண்டும் என்று அறிவுரை கூறுவதும், வேதியியல் சமன்பாட்டை படித்து ஒப்பிக்க சொல்வதும் ஆசிரியர் பணியில் ஒரு அங்கமாகும், இது மாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் செயல் அல்ல. எனவே, மனுதாரர்கள் மீது தற்கொலைக்கு தூண்டுதல் என்று சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு பொருந்தவில்லை. கல்வி கற்க சிரமப்பட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவியின் செயலுக்கு வருத்தம் தெரிவிக்கப்படுகிறது. இதுபோன்ற செயல் எதிர்காலத்தில் நடக்கக்கூடாது.

இந்த சூழ்நிலையில் மனுதாரர்கள் 5 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்குகிறேன். இவர்கள் விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் ரூ.10 ஆயிரம் செலுத்தி, அதே தொகைக்கு இருநபர் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

ஆஜராக வேண்டும்

பின்னர், ஆசிரியைகள் இருவர் சேலத்தில் தங்கியிருந்து, செவ்வாய்பேட்டை போலீஸ் நிலையத்திலும், தாளாளர் உள்ளிட்ட 3 பேர் மதுரையில் தங்கியிருந்து தல்லாகுளம் போலீஸ் நிலையத்திலும் 4 வாரத்துக்கு கையெழுத்திட வேண்டும். அதன்பிறகு 4 வாரங்களுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் முன்பு கையெழுத்திட வேண்டும்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.


Next Story