408 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணை வழங்கும் விழா: எதிர் தரப்பினரும் பாராட்டும் வகையில் பள்ளிக்கல்வித்துறை செயல்படுகிறது-அமைச்சர் கே.என்.நேரு பேச்சு
எதிர் தரப்பினரும் பாராட்டும் வகையில் பள்ளி கல்வித்துறை செயல்பட்டு வருவதாக சேலத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.
அங்கீகார ஆணைகள்
பள்ளி கல்வித்துறை சார்பில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்காவில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். மேயர் ராமச்சந்திரன், எம்.எல்.ஏ.க்கள் வக்கீல் ராஜேந்திரன், அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு சேலம் உள்பட 5 மாவட்டங்களை சேர்ந்த 408 தனியார் பள்ளிகளுக்கான அங்கீகார ஆணைகளை வழங்கினர்.
விழாவில், அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-
வெளிப்படை தன்மையுடன்
பொதுமக்கள் பங்களிப்புடன் செயல்படுத்தும் திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக அமைந்துள்ளன. அந்த வகையில் கல்வித்துறையில் இணைந்து தனியார் பள்ளிகளும் தங்களது பங்களிப்பை வழங்குவதால் இந்தியாவில் சிறப்பாக கல்வி கற்கின்ற மாநிலங்களில் தமிழ்நாடு 2-வது இடத்திற்கு உயர்ந்துள்ளது.
இதற்கு முன்பு தனியார் பள்ளிகள் அங்கீகாரம் பெறுவதற்கு எவ்வளவு சிரமப்பட வேண்டியிருக்கும் என்பது உங்களுக்கு தெரியும். ஆனால் தற்போது எவ்வித சிரமமும் இல்லாமல் பள்ளி கல்வித்துறை அமைச்சர் உங்களை எல்லாம் அழைத்து வெளிப்படை தன்மையுடன் இங்கே அங்கீகார ஆணைகளை வழங்கியுள்ளார். குறிப்பாக தினமும் எங்களை விமர்சிக்கின்ற யூ-டியூப் சேனல்கள் கூட பள்ளி கல்வித்துறையில் 30 ஆயிரம் ஆசிரியர்களுக்கு கலந்தாய்வின் மூலம் பணி மாறுதல் வழங்கப்பட்டதில் ஒரு சிறு தவறு கூட இல்லாத வகையில் வெளிப்படை தன்மையுடன் செயல்பட்டதற்கு பள்ளிக்கல்வித்துறைக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். எதிர் தரப்பினரும் பாராட்டும் வகையில் பள்ளி கல்வித்துறையின் செயல்பாடு உள்ளது.
இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.
நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர், துணை மேயர் சாரதாதேவி, தனியார் பள்ளிகள் இயக்குனர் நாகராஜ முருகன், முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.சிவலிங்கம், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, உதவி கலெக்டர் (பயிற்சி) சுவாதி ஸ்ரீ, முதன்மை கல்வி அலுவலர் கபீர், மண்டலக்குழு தலைவர் உமாராணி மற்றும் தனியார் பள்ளிகளை சார்ந்த தாளாளர்கள், பள்ளி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.