ரூ.7.11 கோடிக்கு சொத்து குவித்ததாகஅரசு தொழில் மைய அதிகாரி-மனைவி மீது வழக்கு


ரூ.7.11 கோடிக்கு சொத்து குவித்ததாகஅரசு தொழில் மைய அதிகாரி-மனைவி மீது வழக்கு
x

நெல்லையில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.7.11 கோடி சொத்து குவித்ததாக அரசு தொழில்மைய அதிகாரி-மனைவி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருநெல்வேலி

அரசு தொழில்மைய மேலாளர்

நெல்லை பாளையங்கோட்டை ரகுமத் நகரை சேர்ந்தவர் முருகேஷ். இவர் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரையிலும் நெல்லை மாவட்ட அரசு தொழில்மைய மேலாளராக பணியாற்றியபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார்கள் எழுந்தன.

இதையடுத்து நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மெக்லரின் எஸ்கால், இன்ஸ்பெக்டர் ராபின் ஞானசிங், சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரியப்பன், சீதாராமன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் முருகேஷின் வீட்டுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கின. மேலும், ரூ.1 லட்சத்து 77 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

ரூ.7.11 கோடி சொத்து குவிப்பு

இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில், முருகேஷ் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.7 கோடியே 11 லட்சத்து 47 ஆயிரத்து 737-க்கு சொத்து குவித்து இருப்பதும், அதில் பெரும்பாலான சொத்துகள் அவருடைய மனைவி சகிலா பெயரில் வாங்கி இருப்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து முருகேஷ், அவருடைய மனைவி சகிலா ஆகியோர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். முருகேஷ் சுமார் 856 சதவீதம் அதிகமாக சொத்து குவித்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் நெல்லையில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.


Next Story