மயிலாப்பூர் இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு


மயிலாப்பூர் இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
x

மயிலாப்பூரில் தொழில் அதிபர், மனைவியுடன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தயாராகி விட்டது. குற்றவாளிகள் இருவரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சென்னை

சென்னை,

இரட்டை கொலை-கொள்ளை

சென்னை மயிலாப்பூர் துவாரகா காலனியைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (வயது 58). தொழில் அதிபர். குஜராத் மாநிலத்தில் கம்ப்யூட்டர் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி பெயர் அனுராதா (55). இவர்களுக்கு சுனந்தா என்ற மகளும், சஸ்வத் என்ற மகனும் உள்ளனர். சுனந்தாவுக்கு திருமணம் ஆகி, கணவருடன் அமெரிக்காவில் வசிக்கிறார். மகன் சஸ்வத்துக்கு திருமணம் ஆகவில்லை. அவரும் அமெரிக்காவில்தான் வேலை செய்கிறார். கடந்த மே மாதம் மகனையும், மகளையும் அமெரிக்கா சென்று பார்த்துவிட்டு, ஸ்ரீகாந்தும், அவரது மனைவி அனுராதாவும் சென்னை திரும்பினார்கள்.

அவர்களது கார் டிரைவர் கிருஷ்ணா என்பவர், அவர்களை விமான நிலையத்தில் இருந்து காரில் வீட்டுக்கு அழைத்து வந்தார். வீட்டுக்கு வந்தவுடன் ஸ்ரீகாந்தும், அவரது மனைவியும் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். அவர்களது உடல்கள் அவர்களது காரிலேயே எடுத்து செல்லப்பட்டு, சென்னையை அடுத்த நெமிலிச்சேரியில் உள்ள அவர்களது பண்ணை வீட்டில் புதைக்கப்பட்டது. ஸ்ரீகாந்த் வீட்டில் இருந்த 1,000 பவுன் தங்க-வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.

டிரைவர், நண்பருடன் கைது

இந்த படுபாதக செயலில் ஈடுபட்டதாக கார் டிரைவர் கிருஷ்ணா, அவருடைய நண்பர் ரவிராய் இருவரும் கைது செய்யப்பட்டனர். கொள்ளையடித்த நகைகள் மீட்கப்பட்டது. போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில், அப்போதைய தென்சென்னை கூடுதல் கமிஷனர் டாக்டர் கண்ணன் தலைமையிலான தனிப்படை போலீசார் இந்த வழக்கில் திறமையாக துப்பு துலக்கி குற்றவாளிகள் இருவரையும் உடனடியாக கைது செய்தனர்.

குற்றவாளிகள் இருவரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீது உடனடியாக குற்றப்பத்திரிகை தயாரிக்க கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். தற்போதைய தென்சென்னை கூடுதல் கமிஷனர் பிரேம்ஆனந்த் சின்கா மேற்பார்வையில் குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் குற்றப்பத்திரிகை கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.


Next Story