பேச்சு போட்டியில் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் சாதனை


பேச்சு போட்டியில் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் சாதனை
x

கருணாநிதி பிறந்த நாள் விழாவையொட்டி நடைபெற்ற பேச்சு போட்டியில் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் சாதனை படைத்தனர்.

பெரம்பலூர்

தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் மறைந்த முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாளையொட்டி பள்ளி மாணவ-மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான பேச்சு போட்டி பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. இதற்கு தமிழ் வளர்ச்சி துறையின் மாவட்ட உதவி இயக்குனர் சித்ரா தலைமை தாங்கினார். இதில் மாவட்டங்களில் உள்ள பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 26 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு கருணாநிதி பற்றி பல்வேறு தலைப்புகளில் பேசி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். நடுவர்களாக முதுகலை தமிழ் ஆசிரியர்கள் சின்னதுரை, செந்தில்குமார், ரமணி ஆகியோர் செயல்பட்டனர். பேச்சு போட்டியில் முதலிடத்தை வி.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு பயிலும் ஆகாசும், 2-ம் இடத்தை குன்னம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு பயிலும் சந்தியாவும், 3-ம் இடத்தை கவுல்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு பயிலும் வனிதாவும் பிடித்தனர். இவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரமும் மற்றும் பாராட்டு சான்றிதழும், மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா மூலம் விரைவில் வழங்கப்படவுள்ளது. இவை அல்லாமல் சிறப்பு பரிசுக்காக பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்பட்ட பேச்சு போட்டியில் பங்கேற்றவர்களில், பாடாலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு பயிலும் ஹரிகரனும், சிறுவாச்சூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு பயிலும் அகல்யாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சிறப்பு பரிசு தொகையாக தலா ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படவுள்ளது, என்று தமிழ் வளர்ச்சி துறையினர் தெரிவித்தனர்.


Next Story