சேலம் மாணவ, மாணவிகள் சாதனை
மாநில கலை திருவிழா போட்டிகளில் சேலம் மாணவ, மாணவிகள் 2-வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளதாக கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
பரிசளிப்பு விழா
சேலம் மாவட்டத்தில் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கலை திருவிழா போட்டிகள் நடைபெற்றது. இதற்கான பரிசளிப்பு விழா சேலம் குளூனி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி கலை திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு கோப்பை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
2022-23-ம் ஆண்டிற்கான கலை திருவிழாவில் மாணவர்களுக்கு நடனம், நாடகம், இசை, கட்டுரை எழுதுதல், ஓவியம், கதை எழுதுதல், சிற்பம் செய்தல், பேச்சுப்போட்டி, இசைக் கருவி வாசித்தல், திருக்குறள் ஒப்புவித்தல் என 200-க்கும் மேற்பட்ட போட்டிகள் பள்ளி, வட்டார, மாவட்ட மற்றும் மாநில அளவில் நடைபெற்றது.
2-வது இடம் பிடித்து சாதனை
மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற 536 மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டனர். இதில் 33 வகையான கலைத்திறன் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளில் மாநில அளவில் சேலம் மாவட்ட மாணவ, மாணவிகள் 2-வது இடம் பிடித்து சாதனை படைத்தனர். இதற்காக முதல்-அமைச்சரிடம் பரிசு கோப்பை பெற்றுள்ளோம்.
குறிப்பாக அம்மாபேட்டை அரசு மகளிர் மேல்நிலை பள்ளி 10-ம் வகுப்பு மாணவி அபிநயா மாநில அளவில் செவ்வியல் இசை, மெல்லிசை ஆகிய 2 போட்டிகளில் முதலிடம் பெற்று "கலையரசி" என்ற பட்டம் வென்றார். மாணவ, மாணவிகளின் மன தைரியத்தை அதிகப்படுத்தும் கருவி, மேடை ஆகும். அவர்களின் ஆளுமை திறனை வளர்க்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு உள்ளது.
புதைந்து கிடக்கும் திறமைகள்
கலை திருவிழா போட்டிகள் மாணவ, மாணவிகளுக்குள் புதைந்து கிடக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வரும் சிறந்த அரங்கமாகும். ஒவ்வொரு குழந்தைகளும் தனித்திறன் மிக்கவர்கள். ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளுக்கு ஊக்கம் மற்றும் வாய்ப்புகளை வழங்கி அவர்களது வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான பாதைகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் கார்மேகம் பேசினார்.
விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், கவுன்சிலர் வசந்தா மயில்வேல் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள், உதவி திட்ட அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.