டேங்கர் லாரியில் இருந்து சாலையில் ஆறாக ஓடிய திராவகம் :தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
திண்டிவனம் அருகே அரசு பஸ் மோதியதால் டேங்கர் லாரியில் இருந்து சாலையில் திராவகம் ஆறாக ஓடியது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்படடது.
திண்டிவனம்,
ஆந்திரா மாநிலம் நெல்லூரில் இருந்து 30 டன் திராவகம் (சல்பியூாிக் ஆசிட்) ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் அறிவழகன் (வயது 38) என்பவர் ஓட்டி சென்றார்.
லாரிக்கு பின்னால், சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு விரைவு பஸ் ஒன்று வந்தது. பஸ்சை ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா பாம்புவிழுந்தான் கிராமத்தை சேர்ந்த சந்திரகாசன்(42) என்பவர் ஓட்டினார். இதில் 41 பேர் பயணம் செய்தனர்.
சாலையில் கவிழ்ந்த பஸ்
டேங்கர் லாரி, விரைவு பஸ் ஆகிய இரண்டும் ஒன்றன் பின் ஒன்றாக, நேற்று அதிகாலை விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தன.
அப்போது, விரைவு பஸ் அந்த பகுதியில் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி, டேங்கர் லாரியின் பின்பகுதியில் மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த விரைவு பஸ், சாலையில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. அதிர்ஷ்டவசமாக பஸ்சில் வந்த பயணிகள் அனைவரும் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர்.
சாலையில் ஓடிய திராவகம்
அதேநேரத்தில், விரைவு பஸ் மோதியதில், டேங்கர் லாரியின் பின்புறம் வால்வு சேதமடைந்தது. இதனால் டேங்காில் இருந்த திராவகம் (சல்பியூரிக் ஆசிட்) சாலையில் ஆறாக வழிந்தோடியது.
தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் ஒரு வேதிப்பொருளான இந்தவகை திராவகம், அரிப்பு தன்மை வாய்ந்த ஒன்றாகும். நீரில் எல்லா அளவிலும் கலந்து கரையக்கூடிய ஒன்றாகும்.
இந்த நிலையில் சாலையில் ஓடிய திராவகத்தால் அந்த வழியாக வாகனத்தில் வரும் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உருவானதால், பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்த ஒலக்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, போக்குவரத்தை மாற்று பாதையில் திருப்பி விட்டனர்.
மேலும் டேங்கர் லாரியை அந்த பகுதியில் உள்ள ஓடை அருகே திருப்பி விட்டு, திராவகம் யாருக்கும் பாதிப்பு இ்ல்லாத வகையில் ஓடையின் உள்ளே செல்லும் வகையில் திருப்பி விட்டனர்.
தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்
இதனிடையே திண்டிவனம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, திராவகம் வழிந்தோடிய சாலையில் தண்ணீரை பீய்ச்சி அடித்து நீர்த்துப் போகும்படி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விபத்து குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.