சிலைக்கடத்தல் வழக்கில் இருந்து விடுதலை ஆனதால் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் மீது உரிமை கோர முடியாது - ஐகோர்ட்டு உத்தரவு


சிலைக்கடத்தல் வழக்கில் இருந்து விடுதலை ஆனதால் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் மீது உரிமை கோர முடியாது - ஐகோர்ட்டு உத்தரவு
x

சிலைக்கடத்தல் வழக்கில் இருந்து விடுதலை ஆனதால், வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் மீது உரிமை கோர முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை அடையாரில் உள்ள ஒரு வீட்டின் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சிலைகளை சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் கடந்த 1994-ம் ஆண்டு பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் 35 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த எழும்பூர் கோர்ட்டு, குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி அனைவரையும் விடுதலை செய்து கடந்த 2012-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து போலீஸ் தரப்பில் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், கோவில் நிர்வாகம் தரப்பில் உடனடியாக புகார் அளிக்கப்படவில்லை என்பதற்காக சிலை திருட்டில் ஈடுபட்டவர்களை தப்பிக்க விடக்கூடாது. வழக்கில் தொடர்புடைய சிலைகள் மற்றும் பழங்காலப் பொருட்கள் தொன்மை வாய்ந்தவை என தொல்லியல் துறை சான்றளித்துள்ளது. எனவே, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து கீழ் கோர்ட்டு தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் போலீசில் அளித்த தகவலின்பேரில் வெளிநாடுகளில் இருந்து 91 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் கீழ் கோர்ட்டு மேம்போக்காக விசாரித்து அனைவரையும் விடுதலை செய்துள்ளது" என்று வாதிடப்பட்டது.

அதேபோல, குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் வக்கீல் வாதிட்டனர்.இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

1994-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் கீழ் கோர்ட்டு விடுதலை செய்து 10 ஆண்டுகளாகி விட்டது என்பதால் அந்த உத்தரவில் தலையிட விரும்பவில்லை.

அதேநேரம் விடுதலை செய்யப்பட்டு விட்டோம் என்பதற்காக, வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் மீது குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் உரிமை கோர முடியாது. மீட்கப்பட்ட பழங்கால சிலைகள் மற்றும் பொருட்களை சம்பந்தப்பட்ட கோவில் அல்லது அரசு அருங்காட்சியகங்களில் வைத்து பாதுகாக்க வேண்டும்.

ஒருவேளை இந்தப் பொருட்களுக்கு குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் உரிமை கோரினால், அவர்கள் எழும்பூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய வேண்டும். எழும்பூர் கோர்ட்டு, இவர்கள் மீதான பழைய வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

1 More update

Next Story