சிறுவாணி ஆற்றின் குறுக்கேதடுப்பணைகள் கட்டும் கேரளா
சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகள் கட்டி வருகிறது. இதனால் கோவையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.
சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகள் கட்டி வருகிறது. இதனால் கோவையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.
சிறுவாணி அணை
கோவை மாநகர பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை மற்றும் பில்லூர் அணைகள் இருந்து வருகின்றன. கேரள மாநிலத்திற்கு உட்பட்ட முத்திக்குளம் பகுதியில் உருவாகும் சிறுவாணி ஆறு, கூடுதுறை என்ற இடத்தில் பவானி ஆற்றில் இணைகிறது.
இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணையும், கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள பில்லூர் அணையும் கோவையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றன. ஏற்கனவே பவானி ஆற்றின் குறுக்கே தமிழக விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினரின் எதிர்ப்பையும் மீறி கேரள அரசு தடுப்பணைகளை கட்டியுள்ளது.
தடுப்பணைகள் கட்டும் பணி
இந்த நிலையில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளை கட்டும் பணிகளை கேரள அரசு தொடங்கி உள்ளது. அட்டப் பாடி கூலிகடவு - சித்தூர் சாலையில் நெல்லிப்பதி என்ற இடத்தில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
அங்கு ஆற்றை மறித்து தடுப்பணை கட்டுமான பணிகள் 90 சதவீதம் அளவிற்கு முடிவடைந்து உள்ளது. மேலும் 2 இடங்களில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட கேரள அரசு திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக கோடை காலங்களில் பில்லூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைய வாய்ப்பு உள்ளது. இது தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அனுமதி பெறவில்லை
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
சிறுவாணி மற்றும் பவானி ஆறுகள் காவிரி ஆற்றின் கிளை நதி களாக இருந்து வருகிறது. இந்த ஆறுகளின் குறுக்கே எந்தவித கட்டுமான பணிகளை மேற்கொள்ளவும் காவிரி மேலாண்மை வாரியத்தில் அனுமதி பெற வேண்டும். ஆனால் கேரள அரசு எவ்வித அனுமதியும் பெறாமல் தடுப்பணைகளை கட்டி வருகிறது.
ஏற்கனவே பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்ட எதிர்ப்பு எழுந்ததால் அம்முயற்சியை கேரள அரசு கைவிட்ட நிலையில், பவானி ஆற்றின் குறுக்கே சில இடங்களில் தமிழக விவசாயிகள் மற்றும் அமைப்பினர் எதிர்ப்பையும் மீறி தடுப்பணைகளை சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டியது.
கோவையில் குடிநீர் தட்டுப்பாடு
சிறுவாணி அணையில் கோடை காலங்களில் தண்ணீர் எடுத்து வந்த சுரங்கப்பாதையும் கேரள அரசு மூடி விட்டது. தற்போது சிறுவாணி ஆற்றின் குறுக்கேயும் தடுப்பணைகளை கட்டி வருகிறது.
இதனால் கோடை காலங்களில் பில்லூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறையவும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
எனவே தமிழ்நாடு அரசு கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தடுப்பணைகள் கட்டுமான பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
போராட்டம் நடத்துவோம்
இது குறித்து தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் கூறியதாவது:-
சிறுவாணி அணையில் காவிரி மேலாண்மை வாரியத்தின் அனுமதி பெறாமல் கேரள அரசு தடுப்பணை கட்டுகிறது. இதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
விரைவில் அனைத்து கட்சிகளின் கூட்டத்தை கூட்டி, கேரளாவுக்கு எதிரான போராட்டத்தை நடத்துவோம்.
ஏற்கனவே சிறுவாணி அணையில் மொத்தம் உள்ள 50 அடியில், 45 அடி மட்டுமே தண்ணீரை தேக்க கேரளா நடவடிக்கை எடுக்கிறது. 5 அடி அளவுக்கு தண்ணீரை குறைத்து இருப்பதாலும், சிறுவாணி நீரேற்றும் நிலையத்தில் கடைசி வால்வை கான்கிரீட் வைத்து கேரள அதிகாரிகள் அடைத்து வைத்து இருப்பதாலும் கோவையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. எனவே கேரளாவின் இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.