மாவட்ட அளவிலான நடிப்பு போட்டி


மாவட்ட அளவிலான நடிப்பு போட்டி
x
திருப்பூர்


மாநிலக்கல்வியியல் மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வழிகாட்டுதலோடு திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி நகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் மாவட்ட அளவிலான பங்கேற்று நடித்தல் போட்டி நடைபெற்றது.

மாவட்ட அளவிலான போட்டி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு தேசிய மக்கள் தொகை கல்வித்திட்டம், வளரிளம் பருவக்கல்வி தொடர்பான பங்கேற்று நடித்தல் போட்டி பள்ளி அளவில் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று மாவட்ட அளவிலான பங்கேற்று நடித்தல் போட்டி உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இதில் பல்வேறு ஒன்றியங்களைச் சேர்ந்த சுமார் 10 பள்ளிகளில் இருந்து மாணவ-மாணவிகள், ஆசிரியர்களோடு பங்கேற்றனர். பங்கேற்று நடித்தல் போட்டியை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளித்தலைமை ஆசிரியர் ப.விஜயா தொடங்கி வைத்தார்.

நடுவர்கள்

இந்த போட்டிக்கு திருமூர்த்தி நகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர்கள் பிரபாகரன், கவுசல்யாதேவி, பூலாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலைத் தமிழாசிரியர் சரவணன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.

போட்டியில் உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடமும், நஞ்சியம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் 2-ம் இடமும், விஜயாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 3-ம் இடமும் பெற்றனர்.

கோவையில் மாநில போட்டி

முதலிடம் பெற்ற பள்ளி மாணவர்களுக்கு ரூ.1,500-ம், 2-ம் இடம் பெற்ற பள்ளி மாணவர்களுக்கு ரூ.1,000-மும், 3-ம் இடம் பெற்ற பள்ளி மாணவர்களுக்கு ரூ.750-ம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

மாநில அளவிலான பங்கேற்று நடித்தல் போட்டி இந்த மாதம் 26-ந்தேதி கோவை மாவட்டம் ஒண்டிப்புதூரில் அமைந்துள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடைபெறும் என்று திருமூர்த்திநகர் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் சங்கர் தெரிவித்தார்.

மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற பள்ளிகள் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றவர்கள் ஆவார்கள்.


Next Story