கலைஞர் மகளிர் உரிமைத்தொகைதகுதியான அனைத்து பயனாளிகளுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்கலெக்டர் சாந்தி அறிவுறுத்தல்
தர்மபுரி
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை தகுதியுள்ள அனைத்து பயனாளிகளுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு தர்மபுரி கலெக்டர் சாந்தி அறிவுறுத்தினார்.
ஆலோசனை கூட்டம்
தமிழ்நாடு அரசு சார்பில் வருகிற செப்டம்பர் மாதம் 15-தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து துறை அலுவலர்கள் ஆலோசனை நடத்தினர்.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் எனும் சிறப்புமிக்க திட்டத்தினை அறிவித்துள்ளார். இந்த திட்டத்தை தர்மபுரி மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டத்தை மேற்கொள்ள மாவட்ட அளவில் மேற்பார்வை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசின் வழிகாட்டுதல் படி துறை அலுவலர்கள் பயனாளிகளை தேர்வு செய்யும் பணிகளை மேற்கொள்ளவேண்டும்.
தகுதியுள்ள பணியாளர்கள்
தர்மபுரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டதிற்கான விண்ணப்பங்கள் வினியோகம் முறையாக மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை தகுதி உள்ள அனைத்து பயனாளிகளுக்கும் கிடைக்க அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் எந்த வித குளறுபடியும் இல்லாமல் மேற்கொள்ள அலுவலர்கள் உறுதியேற்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் வினியோகம் செய்யும்போது கூட்ட நெரிசல் ஏற்படாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கலெக்டர்பேசினார்.
கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் பழனி தேவி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் சாந்தி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஜெயக்குமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சந்தானம் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.