விதிமுறைகளை பின்பற்றாதவிதை விற்பனையாளர்கள் மீது நடவடிக்கைஅதிகாரி எச்சரிக்கை


விதிமுறைகளை பின்பற்றாதவிதை விற்பனையாளர்கள் மீது நடவடிக்கைஅதிகாரி எச்சரிக்கை
x
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

விதிமுறைகளை பின்பற்றாத விதை விற்பனையாளர்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி விதை ஆய்வு துணை இயக்குனர் சங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாற்று பண்ணை

கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் 330 நாற்றுப் பண்ணைகள் உள்ளன. பெரும்பாலான காய்கறி பயிர்கள் தற்போது நாற்றங்காலில் நாற்றுகளாக தயார் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. எனவே நாற்றுபண்ணை உரிமையாளர்கள் அரசின் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். தரமான நாற்றுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்யவேண்டும்.

உரிமம் பெற்ற பின்னரே அனைத்து ரக காய்கறிகள் மற்றும் இதர பயிர்களின் நாற்றுகளும் விற்பனை செய்ய வேண்டும். உரிமம் பெறாமல் நாற்றுகள் விற்பனை செய்வது சட்டப்படி குற்ற செயலாகும். மேலும் நாற்று பண்ணை உரிமையாளர்கள் விதைகளை உரிமம் பெற்ற விதை விற்பனையாளர்களிடம் இருந்து மட்டுமே வாங்க வேண்டும். விதைகளை வாங்கும் போது விதையின் முளைப்புத்திறன் சான்று சரிபார்த்து வாங்க வேண்டும்.

நடவடிக்கை

மேலும், பருவத்திற்கு ஏற்ற ரகம் மற்றும் அப்பகுதிக்கு ஏற்ற ரகம் போன்றவற்றை சரிபார்த்து காலாவதி நாள், குவியல் எண் ஆகியவற்றுடன் கூடிய பட்டியல் பெற்று விதைகளை வாங்க வேண்டும். அவ்வாறு வாங்கி விதைகளை முறையாக நாற்று தட்டுகளில் விதைப்பு செய்து பராமரிக்க வேண்டும். நாற்றுகளின் எண்ணிக்கையை முறையாக இருப்பு பதிவேட்டில் பதிவேற்றம் செய்ய வேண்டும். நாற்று பண்ணையில் அரசிடமிருந்து பெற்ற உரிமத்தின் நகலை தெளிவாக கண்ணில் படுமாறு வைக்க வேண்டும்.

அனைத்து விதிமுறைகளையும் நாற்று பண்ணை உரிமையாளர்கள் கடைபிடிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் நீதிமன்றத்தின் மூலம் வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். புதிதாக உரிமம் பெற தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள விதை ஆய்வு துணை இயக்குனர் அலுவலகத்தை அணுகி உரிமம் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக ராயக்கோட்டையில் உள்ள விதை பண்ணயில் விதை ஆய்வு துணை இயக்குனர் சங்கர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.


Next Story