போலீஸ் நிலையங்களில் குற்றப்பிரிவு செயல்பட நடவடிக்கை
அனைத்து போலீஸ் நிலையங்களிலும் குற்றப்பிரிவு செயல்பட மாவட்ட போலீஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் தொடர் குற்றங்கள் நடந்து வரும் நிலையில் இது தொடர்பான நடவடிக்கை எடுக்க அனைத்து போலீஸ் நிலையங்களிலும் குற்றப்பிரிவு செயல்பட மாவட்ட போலீஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதிகரிப்பு
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த பல மாதங்களாக திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலை உள்ளது. ஆளில்லாத வீடுகளை குறிவைத்து நகை, பணம் கொள்ளையடித்து செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கிராமப்புற சாலைகளிலும், புறநகர் சாலைகளிலும் தனியாக செல்லும் பெண்களிடம் நகைகளை பறித்து செல்லும் மோட்டார் சைக்கிள் கொள்ளையர்களின் கைவரிசையும் பரவலாக அதிகரித்து வரும் நிலை உள்ளது.
விருதுநகரில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே அடுத்தடுத்த நாட்களில் 15 பவுன் நகை பறித்து செல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. ராஜபாளையம் மற்றும் அருப்புக்கோட்டையில் ஆதாய கொலைகளும் நடந்துள்ளன.
துப்பு துலங்காத நிலை
கடந்த பல மாதங்களாக திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் துப்பு துலக்கப்படாத நிலை நீடிக்கிறது. கடந்த காலங்களில் போலீஸ் நிலையங்களில் குற்ற பிரிவுக்கென இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்பிரிவு செயல்பட்டு வந்த நிலையில் அப்பிரிவில் குற்ற வழக்குகளில் அனுபவம் பெற்ற போலீசார் நியமிக்கப்பட்டிருந்தனர். இதனால் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களில் துப்பு துலக்கி பொருட்களை மீட்கும் நிலை தொடர்ந்து இருந்து வந்தது.
மேலும், மாவட்ட அளவில் குற்றப்பிரிவுக்கென கூடுதல் போலீஸ் சூப்பிரண்டும் நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் தற்போது போலீஸ் நிலையங்களில் குற்றப்பிரிவு செயல்படாத நிலையில் திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகளில் துப்பு துலக்குவதில் முடக்கம் ஏற்பட்டுள்ளது. பொருட்களை பறிகொடுத்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
கோரிக்கை
எனவே மாவட்ட போலீஸ் நிர்வாகம் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் குற்றப்பிரிவை ஏற்படுத்தி அதற்கு தேவையான போலீசாரை பணியமர்த்தி திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகளில் துப்பு துலக்கி பொருட்களை மீட்கவும், திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடப்பதை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மாதந்தோறும் திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்தும் மாவட்ட போலீஸ் நிர்வாகம் ஆய்வு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.