ஓசூர் அரசு ஆஸ்பத்திரியை ரூ.99½ கோடியில் தரம் உயர்த்த நடவடிக்கை


ஓசூர் அரசு ஆஸ்பத்திரியை ரூ.99½ கோடியில் தரம் உயர்த்த நடவடிக்கை
x

ஓசூர் அரசு மருத்துவமனை ரூ.99.61 கோடியில் அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படுவதாகவும், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 50 படுக்கை வசதியுடன் தீவிர சிகிச்சை பிரிவு ரூ.23 கோடியே 75 லட்சத்தில் அமைக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை

அமைச்சர் ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா காரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம், ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் ரூ.14 கோடியே 12 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் 50 படுக்கை வசதி கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு ரூ.23 கோடியே 75 லட்சம் மதிப்பிலும், ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் ரத்த சுத்திகரிப்பு பிரிவு மற்றும் சிறுநீரக செயலிழப்பு சிகிச்சைக்கான நவீன உபகரணங்கள், தொலை மருத்துவ சேவைகளும் தொடங்கப்பட உள்ளன.

பாரம்பரிய உணவு கண்காட்சி

அதேபோல ஓசூர் அரசு ஆஸ்பத்திரியை ரூ.99 கோடியே 61 லட்சம் மதிப்பில் தரம் உயர்த்தப்படும். ரூ.5.26 லட்சம் மதிப்பீட்டில் அரசு மருத்துவமனைகளில் விபத்து மற்றும் சிகிச்சை மையங்களில் விபத்துக்கான தரவுகளை பதிவேற்றம் செய்தல், பாரூர், மேகலசின்னம்பள்ளி, பாகலூர் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன.

வாடகை கட்டிடங்களில் செயல்பட்டு வரும் 2 துணை சுகாதார நிலையங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் கெலமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், ஓசூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

உணவு கண்காட்சி

தொடர்ந்து ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இளம் வயது திருமணம் தடுப்பு மற்றும் பாரம்பரிய உணவு கண்காட்சியை அமைச்சர் தொடங்கி வைத்து பார்வையிட்டார். ஆய்வின் போது செல்லகுமார் எம்.பி., பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்புத்துறை இயக்குனர் செல்வவிநாயகம், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, முன்னாள் எம்.எல்.ஏ. செங்குட்டுவன், முன்னாள் எம்.பி. சுகவனம், ஒன்றியக்குழு தலைவர் உஷாராணி குமரேசன், துணைத்தலைவர் சத்தியவாணி செல்வம், மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் டாக்டர் மாலதி, பேரூராட்சி தலைவர் அமானுல்லா, ஒன்றிய செயலாளர்கள் குமரேசன், எக்கூர் செல்வம், ரஜினி செல்வம், நரசிம்மன், வசந்தரசு, நகர செயலாளர் பாபு சிவக்குமார், ஒன்றிய குழு உறுப்பினர் குமரேசன், நகர அவைத்தலைவர் தணிகை குமரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


Next Story