கரும்பை வெளி சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை


கரும்பை வெளி சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை
x
தினத்தந்தி 28 Sep 2022 6:45 PM GMT (Updated: 28 Sep 2022 6:45 PM GMT)

பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்த கரும்பை வெளி சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சாந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தர்மபுரி

பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்த கரும்பை வெளி சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சாந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:-

சர்க்கரை ஆலை

பாலக்கோடு தாலுகாவில் உள்ள தர்மபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2022-2023-ம் ஆண்டு அரவை பருவத்திற்கு பதிவு செய்யப்பட்ட கரும்பை ஆலை விதிகளுக்கு புறம்பாக எடுத்து செல்ல சில இடைத்தரகர்கள், வெல்லம் ஆலை உரிமையாளர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். இது சட்டப்படி குற்றமாகும். இதனால் ஆலைக்கும், அரசுக்கும் வருவாய் இழப்பீடு ஏற்படுகிறது.

எனவே சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்த கரும்பை முறைகேடான வகையில் வெளி சந்தை, வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு விற்பனை செய்வதாக மாவட்ட நிர்வாகத்திற்கும், ஆலை நிர்வாகத்துக்கும் பல்வேறு புகார்கள் வருகின்றன. ஆலைக்கு பதிவு செய்த கரும்பை முறைகேடாக வெளி சந்தையில் விற்றால் அங்கத்தினர்கள், இடைத்தரகர்கள், வெல்லம் ஆலை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தடையில்லா சான்றிதழ்

மேலும் ஆலை பகுதிக்கு உட்பட்ட பதிவு செய்யாத கரும்பை எடுத்து செல்பவர்கள் உரிய கோட்ட கரும்பு அலுவலரிடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். அதன் பின்னரே தங்களது கரும்பை வாகனங்களில் ஏற்றிச் செல்ல வேண்டும். உரிய ஆவணங்கள் இன்றி கரும்பு ஏற்றி செல்லும் போது அந்த வாகனங்களை போலீசார் மூலம் பறிமுதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story