விதிமுறைகளை மீறும் பள்ளி வாகனங்கள் மீது நடவடிக்கை
விதிமுறைகளை மீறி குழந்தைகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விதிமுறைகளை மீறி குழந்தைகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
ஒப்புதல் பெற வேண்டும்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஆணையர் சுற்றறிக்கையின் படியும், மோட்டார் வாகன சட்டத்தின் படியும் தர்மபுரி மாவட்டத்தில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோ, வேன் மற்றும் ஒப்பந்த ஊர்தி வாகனங்கள் கட்டுப்பாடுகள் மற்றும் ஒழுங்கு முறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. அதன்படி பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் வாகனங்களின் உரிமையாளர்கள், டிரைவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளியில் முதல்வர் மற்றும் தலைமை ஆசிரியரிடம் விண்ணப்பித்து ஒப்புதல் பெற வேண்டும்.
பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்வதற்காக பள்ளி நிர்வாகத்திடம் அனுமதி பெற்ற வாகனங்கள் தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அனுமதிச்சீட்டில் உரிய மேற்குறிப்பு செய்யப்பட வேண்டும். அனுமதி பெற்று பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் முன்புறமும், பின்புறமும் "பள்ளி பணிக்காக" என்று தமிழிலும், " on school duty" என்று ஆங்கிலத்திலும் வாசகங்கள் எழுத வேண்டும்.
புகைச்சான்று
வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மட்டுமே பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்ல வேண்டும். அளவுக்கு அதிகமாக மாணவர்களை ஏற்றிச் செல்ல கூடாது. பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் அனுமதி சீட்டு, தகுதிச்சான்று, காப்புச்சான்று, புகைச்சான்று பெற்று இயக்க வேண்டும். மேலும், டிரைவர்கள் தனியார் சேவை வாகனங்களுக்கான பொதுப்பணி வில்லை பெற்று இருக்க வேண்டும்.
வாகன டிரைவர்கள் பாதுகாப்பாக குழந்தைகளை ஏற்றி இறக்கி விட வேண்டும். மேலும், தேவையான இடங்களில் சாலையை கடக்க உதவ வேண்டும். விதிமுறைகளை மீறி குழந்தைகளை ஏற்றி செல்லும் பள்ளி வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் டிரைவர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
கண்காணிக்க வேண்டும்
மேலும், சொந்த பயன்பாட்டிற்கான வாகனங்களை வாடகை அடிப்படையில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும், தனியார் பள்ளி நிர்வாகத்தினர் தங்கள் பள்ளிக்கு இயக்கப்படும் ஒப்பந்த வாகனங்களுக்கு உரிய அனுமதி பெறுவதற்கு பரிந்துரை செய்வதோடு கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.