கள்ளச்சாராயம் விற்றால்குண்டர் சட்டத்தில் நடவடிக்கை


கள்ளச்சாராயம் விற்றால்குண்டர் சட்டத்தில் நடவடிக்கை
x
தினத்தந்தி 23 May 2023 11:00 AM IST (Updated: 23 May 2023 11:03 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சாந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சாந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆய்வுக்கூட்டம்

தர்மபுரி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து துறை அலுவலர்களுடான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசு பாதம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டு கள்ளச்சாராயம் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கினர்.

கூட்டத்தில் கலெக்டர் சாந்தி பேசியதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவுபடி தர்மபுரி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் தடுப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அலுவலர்கள் கள்ளச்சாராயத்தை ஒழிக்க பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உள்ளனர். இதன் மீது பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. கள்ளச்சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல் மற்றும் பதுக்கி வைத்தல் உள்ளிட்ட கள்ளச்சாராயம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் உடனடியாக குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் கள்ளச்சாராயம் தொடர்பான புகாரினை 63690 28922 என்ற வாட்ஸ்அப் எண் மூலம் தெரிவிக்கலாம்.

விழிப்புணர்வு

கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை அந்த தொழிலில் இருந்து விடுவித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்கு தொடர்புடைய துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி கள்ளச்சாரயத்தை முற்றிலும் ஒழிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு கலெக்டர்பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, உதவி கலெக்டர்கள் கீதாராணி (தர்மபுரி), ராஜசேகரன் (அரூர்), டாஸ்மாக் மாவட்ட மேலாளர் மகேஸ்வரி, கலால் உதவி ஆணையர் சாந்தி மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், தாசில்தார்கள், மருத்துவத்துறை, வனத்துறை உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story