65 நிறுவனங்கள் மீது நடவடிக்கை


65 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
x

தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ஆய்வில் 65 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மீனாட்சி தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்களால் திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் ஆய்வு செய்தனர்.

அப்போது தேசிய விடுமுறை நாளான நேற்று சட்டப்படி பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்காமலும் மாற்றுமுறை விடுமுறை அளிக்காமலும் அதற்கான முறையான அறிவிப்பு அளித்து அனுமதி பெறாமல் பணியாளர்களை பணிக்கு அமர்த்திய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் 32 நிறுவனங்கள் மீதும், உணவு நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் 32 நிறுவனங்கள் மீதும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் 1 நிறுவனத்தின் மீதும் என மொத்தம் 65 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளது.

அந்த நிறுவன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிகளில் நடைபெற்ற கிராமசபை கூட்டங்களில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் பங்கேற்று அரசு ஒப்பந்த பணிகள் மற்றும் இதர பணிகளில் குழந்தை மற்றும் கொத்தடிமை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தவில்லை என தீர்மானம் நிறைவேற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த தகவலை திருவண்ணாமலை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மீனாட்சி தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story