காந்தி ஜெயந்தியன்று விடுமுறை அளிக்காத 97 நிறுவனங்கள் மீது நடவடிக்கை


காந்தி ஜெயந்தியன்று விடுமுறை அளிக்காத 97 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
x

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் காந்தி ஜெயந்தியன்று விடுமுறை அளிக்காத 97 நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ராணிப்பேட்டை

சென்னை தொழிலாளர் கமிஷனர் அதுல்ஆனந்த் உத்தரவின்பேரிலும் கூடுதல் தொழிலாளர் கமிஷனர் உமாதேவி, வேலூர் தொழிலாளர் இணை கமிஷனர் புனிதவதி அறிவுரையின்படியும், வேலூர் தொழிலாளர் உதவிகமிஷனர் (அமலாக்கம்) தே.ஞானவேல் தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தேசிய விடுமுறை தினமான நேற்று (காந்தி ஜெயந்தி) கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுப்பு அளிக்கப்படுகிறதா என்று ஆய்வு மேற்கொண்டனர். 162 நிறுவனங்களில் மேற்கொண்ட ஆய்வில் கடைகள் மற்றும் நிறுவனங்களில் 49 முரண்பாடுகளும், உணவு நிறுவனங்களில் 44 முரண்பாடுகளும் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் 4 முரண்பாடுகளும் என்று மொத்தம் 97 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டன. அந்த நிறுவனங்களின் மீது இணக்க கட்டண அபாரதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் காந்தி ஜெயந்தியன்று நடைபெற்ற கிராமசபை கூட்டங்களில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டு அரசு ஒப்பந்த பணிகளில் குழந்தை தொழிலாளர்கள் மற்றும் கொத்தடிமை தொழிலாளர்கள் பணியமர்த்தப்படவில்லை என்று ஒப்பந்ததாரர்களிடம் சுயசான்று பெற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தகவலை வேலூர் தொழிலாளர் உதவிகமிஷனர் (அமலாக்கம்) தே.ஞானவேல் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story