புதுமைப்பெண் திட்டத்தில் ஈடுபாடு காட்டாத கல்லூரி நிறுவனங்கள் மீது நடவடிக்கைகலெக்டர் ஷ்ரவன்குமார் எச்சரிக்கை


புதுமைப்பெண் திட்டத்தில் ஈடுபாடு காட்டாத கல்லூரி நிறுவனங்கள் மீது நடவடிக்கைகலெக்டர் ஷ்ரவன்குமார் எச்சரிக்கை
x
தினத்தந்தி 29 July 2023 12:15 AM IST (Updated: 29 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

புதுமைப்பெண் திட்டத்தில் ஈடுபாடு காட்டாத கல்லூரி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ஷ்ரவன்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கள்ளக்குறிச்சி


கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப்பெண் திட்டம் குறித்த கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முதலாமாண்டு மாணவிகள்

கூட்டத்தில் கலெக்டர் ஷ்ரவன்குமார் கூறுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப் பெண் திட்டம் பெண் குழந்தைகளின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிப்பதற்கும், அதன் மூலம் பெண்களின் முன்னேற்றத்தை உறுதி செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட திட்டமாகும்.

இத்திட்டம் மாவட்ட சமூக நலத்துறை மூலமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேர்ந்து பயிலும் மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

முதலாம் ஆண்டு படிக்கும்போதே மாணவிகளை கண்டறிந்து இத்திட்டத்தில் சேர்வதற்கு அனைத்து தனியார் மற்றும் அரசு கல்லூரிகள் மேற்கொண்டு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

நடவடிக்கை எடுக்கப்படும்

அந்தந்த கல்வி நிறுவன வளாகங்களில் புதுமைப்பெண் திட்டம் குறித்த விழிப்புணர்வு பதாகைகள் வைப்பது, துண்டு பிரசுரங்கள் விநியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு கல்வி நிறுவனமும் தகுதியான முதலாம் ஆண்டு மாணவிகளின் விவரங்களை சேகரித்து அவர்களை புதுமைப் பெண் திட்டத்தில் சேர்க்க வேண்டும். மாணவிகள் மாதந்தோறும் ஊக்கத்தொகை பெறுவதை கல்லூரி முதல்வர்கள் உறுதி செய்திட வேண்டும்.

இத்திட்டத்தின்கீழ் இதுவரை ஊக்கத் தொகை பெறாத தகுதியான மாணவிகளின் பட்டியலை கண்டறிந்து மாவட்ட சமூக நல அலுவலரிடம் உடனடியாக தெரிவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதுடன், மாணவிகளுக்கு வங்கி கணக்குகள் ஏற்படுத்திட வங்கி சிறப்பு முகாம்கள் கல்லூரியிலே ஏற்பாடு செய்திட வேண்டும்.

முதல்-அமைச்சரின் சிறப்பு திட்டமான இத்திட்டத்தை செயல்படுத்துவதில் ஈடுபாடு காட்டாத கல்லூரி நிறுவனங்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ள பரிந்துரை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரி முதல்வர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story