ரேஷன் கடையை சரியான நேரத்தில் திறக்காத ஊழியர்கள் மீது நடவடிக்கை
ரேஷன் கடைகளை சரியான நேரத்தில் திறக்காத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ஸ்ரீதர் எச்சரித்துள்ளார்.
நாகர்கோவில்:
ரேஷன் கடைகளை சரியான நேரத்தில் திறக்காத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ஸ்ரீதர் எச்சரித்துள்ளார்.
கலெக்டர் ஆய்வு
குமரி மாவட்ட வழங்கல்துறை, கூட்டுறவுத்துறை மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் ரேஷன் கடைகளில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாகர்கோவில் மறவன்குடியிருப்பு காமராஜபுரம் மங்களாவடி பகுதியில் அமைந்துள்ள பல்நோக்கு கூட்டுறவு விவசாய கடன் சங்கத்தின் கீழ் இயங்கும் ரேஷன் கடையில் கலெக்டர் ஸ்ரீதர் நேரில் சென்று திடீர் ஆய்வு நடத்தினார்.
அப்போது ரேஷன் கடையில் வழங்கப்பட்டு வரும் அரிசி, சர்க்கரை, உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு, கோதுமை, மண்எண்ணெய், சமையல் எண்ணெய், தேயிலை, உப்பு உள்ளிட்ட பொருட்கள் சரியாக வழங்கப்படுகிறதா? என்று ஊழியர்களிடம் கேட்டறிந்தார். கடையில் பொருட்களின் இருப்பு அளவு குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
எச்சரிக்கை
மேலும், ரேஷன் கடையை சரியான நேரத்தில் திறந்து பொருட்கள் வாங்க வரும் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் உடனுக்குடன் பொருட்களை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும் ரேஷன் கடைகளை சரியான நேரத்தில் திறக்காத ஊழியர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரித்தார்.
இதுபோல் நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோட்டில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அமுதம் அங்காடியில் கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது தனித்துணை கலெக்டர் திருப்பதி, அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அலுவலர் அனில்குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.