சட்டவிரோதமாக புகையிலை, கஞ்சா, மது விற்றால் நடவடிக்கை


சட்டவிரோதமாக புகையிலை, கஞ்சா, மது விற்றால் நடவடிக்கை
x

கரூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக புகையிலை, கஞ்சா, மது விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் எச்சரித்துள்ளார்.

கரூர்

தனிப்படை

கரூர் மாவட்டம் முழுவதும் நேற்றுமுன்தினம் சட்ட விரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், கஞ்சா, லாட்டரி சீட்டுகள் மற்றும் மது விற்பனையை கட்டுப்படுத்த வேண்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கண்காணிப்பில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 91 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 94 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 14 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் 400 கிராம் கஞ்சா, விற்பனைக்காக வைத்திருந்த 87 லாட்டரி சீட்டுகள், 323 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் சட்ட விரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.

கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள், கஞ்சா, லாட்டரி சீட்டுகள் மற்றும் மது விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் எச்சரித்துள்ளார். மேலும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் பற்றி பொதுமக்களுக்கு தகவல் தெரிய வந்தால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள 04324-296299 மற்றும் 94981-00780 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்க கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.


Next Story