விவசாய சங்கங்களின் நிதியை முறைகேடாக பயன்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


விவசாய சங்கங்களின் நிதியை முறைகேடாக பயன்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

விவசாய சங்கத்தினரின் நிதியில் முறைகேடு செய்திருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை


விவசாய சங்கத்தினரின் நிதியில் முறைகேடு செய்திருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அதிகாரிகளிடம் அதிகாரம்

மதுரை ஐகோர்ட்டில் கடந்த 2016-ம் ஆண்டில் பல்வேறு விவசாய சங்கங்களைச் சேர்ந்தவர்கள் தாக்கல் செய்த மனுக்களில், நீரினை பயன்படுத்துவோர் சங்கம் மற்றும் நீர் மேலாண்மை அமைப்புகளுக்கு புதிய குழு அமைக்கப்படும் வரை அதன் அதிகாரத்தை நீர்வள ஆதார அமைப்பின் உதவி பொறியாளர்கள் மற்றும் இளநிலை பொறியாளர்களுக்கு வழங்கியதை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரர்களின் சங்கங்களுக்கு சட்டப்படி கடந்த 2004-ம் ஆண்டில் தேர்தல் நடந்தது. 2009-ம் ஆண்டில் அவர்களின் பதவிக்காலம் முடிந்தது. இதனால் சங்கத்தின் பணிகளை மேற்கொள்ளும் வகையில் அதிகாரிகளை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டது. இதில் மனுதாரர்கள் எந்தவித உரிமையையும் கோரமுடியாது என்றார்.

அரசாணை ரத்து

விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

விவசாயத்தின் முக்கிய அங்கம் நீர். முறையாக நீர்பங்கீடு செய்வதன் மூலம் உணவு உற்பத்திக்கான இலக்கை அடைய முடியும். சங்க நிர்வாகிகள் பதவிக்காலம் முடிந்து பல ஆண்டுகளாக நிரப்பப்படாத நிலையில் இடைக்காலமாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். பாசன விவசாய நடவடிக்கைகளை விவசாயிகள் மூலமாக நிறைவேற்றுவதுதான் சங்கத்தின் நோக்கம்.

ஆனால் தேர்தலை நடத்தாமல் அதிகாரிகள் பதவியில் நீடித்து வந்துள்ளனர். 7 ஆண்டுக்கு மேலாக தேர்தல் நடத்தாமல் இருந்ததற்கு எந்த விளக்கமும் கூறாமல், அதிகாரிகளை நியமித்தது சட்ட விரோதம். எனவே நீர்மேலாண்மை சங்கங்களை நிர்வகிக்க அதிகாரிகளை நியமித்து 2016-ம் ஆண்டில் பிறப்பித்த அரசாணை செல்லாது என்பதால் அந்த அரசாணை ரத்து செய்யப்படுகிறது.

அதிகாரிகள் மீது நடவடிக்கை

அறுவடை காலத்தின் இறுதியில் இந்த சங்கங்களுக்கான சமூக தணிக்கை நடக்கும். ஒவ்வொரு நிதி ஆண்டிலும் நிதி தணிக்கை செய்யப்படும். ரூ.10 லட்சத்திற்கு மேல் பணப்பரிமாற்றம் இருந்தால் ஆடிட்டர் மூலம் தணிக்கை நடக்கும். சங்கத்தில் அதிகாரிகள் பொறுப்பில் இருந்த காலகட்டத்தில் அதன் நிதியையும் கையாண்டுள்ளனர். எனவே அதுதொடர்பாக முதன்மை கணக்காய்வுத் தலைவர் தரப்பில் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். தணிக்கையில் தவறு நடந்திருப்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரித்துரைக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி என உத்தரவிட்டார்.


Next Story