சிதம்பரம் நடராஜர் கோவிலில் அத்துமீறி நுழைந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை -அண்ணாமலை வலியுறுத்தல்


சிதம்பரம் நடராஜர் கோவிலில் அத்துமீறி நுழைந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை -அண்ணாமலை வலியுறுத்தல்
x

சிதம்பரம் நடராஜர் கோவிலில் அத்துமீறி நுழைந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் தொன்மை வாய்ந்த சிதம்பரம் நடராஜர் கோவிலின் வழிபாட்டு நடைமுறைகளை சிதைக்கும் வகையில், தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறது. வருடாவருடம் நடைபெறும் ஆனித் திருமஞ்சனம் விழா முடிந்து 4 நாட்களுக்கு, சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கனகசபை, மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படாது என்பது அனைவரும் அறிந்ததே.

இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் இல்லாத சிதம்பரம் நடராஜர் கோவிலை, தமிழக அரசு கட்டுப்படுத்த நினைப்பது பக்தர்களை மட்டும் அல்ல, சென்னை கோர்ட்டு, சுப்ரீம்கோர்ட்டை அவமதிக்கும் செயலாகும் என்பதை, அரசு அதிகாரிகளும், அமைச்சரும் நினைவில் கொள்ள வேண்டும்.

சட்டத்துக்கு புறம்பானது

13.12.1951 அன்று சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பில், சிதம்பரம் நடராஜர் கோவிலின் நிர்வாக அதிகாரம் தீட்சிதர்களுக்கு மட்டுமே உள்ளது என்றும் தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது.

இதனை எதிர்த்து, 1953-ம் ஆண்டு, மெட்ராஸ் மாகாண அரசு சுப்ரீம்கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், 1959 -ம் ஆண்டு இயற்றப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை சட்டவிதி 107-ன்படி, இந்து சமயத்தின் உட்பிரிவுகள் நிர்வகிக்கும் கோவில்களில், தமிழக அரசுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்பதை மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். இன்று நடக்கும் அத்துமீறல் போல், முந்தைய தி.மு.க. ஆட்சியிலும், சிதம்பரம் நடராஜர் கோவிலை இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர, 2009-ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த அரசாணைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தமிழக அரசு வெளியிட்ட அரசாணை சட்டத்திற்குப் புறம்பானது என்று அறிவித்தது. 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அரசு இந்த அரசாணையை திரும்ப பெற்றது.

கடும் நடவடிக்கை

2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்த நாள் முதல், சிதம்பரம் நடராஜர் கோவிலில் தொடர்ச்சியாக நிர்வாக இடைஞ்சல் ஏற்படுத்தி, கோவிலை அறநிலையத்துறை கைப்பற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாக அதிகாரத்தின் கீழ் இல்லாத ஒரு கோவிலில் அத்துமீறி நுழைந்து, கோவில் நடைமுறையில் தலையிட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள கோவில்களின் சொத்துக்கள், கொள்ளை அடிக்கப்படுவதை கைகட்டி வேடிக்கை பார்ப்பதையும், ஆட்சியின் அவலங்களை மறைக்க, கோவில்களில் புதுப்புது பிரச்சினைகளை உருவாக்குவதையும் திறனற்ற தி.மு.க. நிறுத்திக் கொள்ளவேண்டும்.

திறனற்ற தி.மு.க.வின் செயல்பாடுகள் இந்து சமயத்திற்கு எதிராக மட்டும் அல்ல, அரசியல் அமைப்புச் சட்டம் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகளுக்கும் எதிரானது. இந்து சமயத்தின் புனிதமான எந்தக் கோட்பாட்டின் மீதும் நம்பிக்கை இல்லாத நாத்திகத்தைப் பரப்பி, இந்து கடவுள்களை கொச்சைப்படுத்தும் கூட்டத்திற்கு அடைக்கலமாகத் திகழும் தி.மு.க., சிதம்பரம் நடராஜர் கோவிலின் நிர்வாகத்தில் இதற்கு மேலும் தலையிட்டால், விளைவுகளை சந்திக்க நேரிடும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story