அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் சார் பதிவாளர்கள் மீது நடவடிக்கை- அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை


அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் சார் பதிவாளர்கள் மீது நடவடிக்கை- அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை
x
தினத்தந்தி 30 Sept 2023 1:30 AM IST (Updated: 30 Sept 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் சார்பதிவாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மதுரை

அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் சார்பதிவாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆய்வுக்கூட்டம்

மதுரை பதிவு மாவட்டத்திற்கு உட்பட்ட சார்பதிவாளர்களின் பணி ஆய்வுக்கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலை வகித்தார். அமைச்சர் மூர்த்தி தலைமை தாங்கி பேசினார். பின்னர் அவர் கூறியதாவது:-

மதுரை வருவாய் மாவட்டத்திற்குட்பட்ட மதுரை வடக்கு, மதுரை தெற்கு என இரு பதிவு மாவட்டங்கள் உள்ளன. இந்த இரு பதிவு மாவட்டத்திற்குட்பட்டு மொத்தம் 26 சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. பதிவுத்துறை என்பது பொதுமக்களின் சொத்து உள்ளிட்ட பல்வேறு விதமான ஆவணப் பதிவுகள் தொடர்பாக சேவையாற்றுவதிலும், அதன் மூலம் அரசுக்கு வருவாய் ஈட்டக் கூடிய முக்கியத்துறையாக விளங்குகிறது. 2023-24-ம் நிதியாண்டில் மதுரை வடக்கு பதிவு மாவட்டத்திற்கு ரூ.478 கோடி மதிப்பீட்டிலும், மதுரை தெற்கு பதிவு மாவட்டத்திற்கு ரூ.571.25 கோடி மதிப்பீட்டிலும் வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதில் இந்த மாதம் வரை மதுரை வடக்கு பதிவு மாவட்டம் மூலம் ரூ.139.29 கோடி மதிப்பீட்டிலும், மதுரை தெற்கு பதிவு மாவட்டம் மூலம் ரூ.141.59 கோடி மதிப்பீட்டிலும் அரசுக்கு வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. அலுவலர்கள் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கை முழுமையாக அடையும் வகையில் பணியாற்றிட வேண்டும்.

நடவடிக்கை

தமிழ்நாட்டில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களின் பணிகள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டுள்ளன. பதிவுக்கு வரும் பொதுமக்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய அனைத்து கட்டணங்களையும் ஆன்லைன் மூலமாகவே செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. சார்பதிவாளர்கள் பத்திரப்பதிவின் போது அரசு நிர்ணயித்துள்ள வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் பதிவுதாரர்கள் சொத்து மதிப்பினை பதிவு ஆவணங்களில் தவறாமல் தெரிவித்து அதற்குரிய முத்திரை தீர்வை மற்றும் பதிவு கட்டணத்தை செலுத்தி ஆவணங்களைப் பதிவு செய்தவதை உறுதி செய்திட வேண்டும். இதில் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்படும் சார்பதிவாளர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் கலெக்டர் சங்கீதா, துணை பதிவுத்துறை தலைவர் ரவீந்திரநாத், மதுரை வடக்கு, மதுரை தெற்கு பதிவு மாவட்டங்களைச் சார்ந்த சார்பதிவாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story