முகநூலில் அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை
வன்னியர்கள் குறித்து அமைச்சர் பொன்முடி பேசியதாக முகநூலில் அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டிடம் புகழேந்தி எம்.எல்.ஏ. மனு அளித்துள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், உயர்கல்வி துறை அமைச்சருமான பொன்முடி ஒரு சமூக மக்களை அவதூறாக பேசியதாக, தனியார் தொலைக்காட்சி பெயரில் கலியபெருமாள் என்பவரது முகநூல் மூலம் விஷம பிரசாரம் பரப்பப்பட்டுள்ளது. எனவே இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து நா.புகழேந்தி எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறுகையில், அமைச்சர் பொன்முடி எப்போதும் சாதி, மதம் பார்த்து பேசியதில்லை. கட்சி நிகழ்ச்சி, திருமண விழாவாக இருந்தாலும் அப்படி பேதம் பார்த்து நடந்ததில்லை. ஆனால் அவர் வன்னியர் மக்களை குறிப்பிட்டு அவதூறாக பேசியதாக தவறான தகவல் பரவியுள்ளது. அவர் இவ்வாறு பேசமாட்டார் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன டாக்டர் ராமதாஸ், அக்கட்சி தலைவர்அன்புமணி ராமதாஸ் போன்றவர்களுக்கு நன்றாக தெரியும்.
அவரது பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில், தவறான விஷம பிரசாரம் கலியபெருமாள் என்பவர் முகநூல் மூலம் பரப்பப்பட்டுள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், தி.மு.க. அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் இந்த செயலை செய்துள்ளனர். எனவே தவறான செய்தியை பரப்பி வருபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அப்போது மாவட்ட துணை செயலாளர் தயா இளந்திரையன், ஒன்றிய செயலாளர்கள் கல்பட்டு ராஜா, விசுவநாதன், ரவிச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.