வியாபாரிகளிடம் பணம் கேட்டு தொல்லை கொடுக்கும் திருநங்கைகள் மீது நடவடிக்கை
கூட்டமாக வந்து வியாபாரிகளிடம் பணம் கேட்டு தொல்லை கொடுக்கும் திருநங்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் வர்த்தக சங்கத்தினர் மனு கொடுத்தனர்.
பண்ருட்டி,
அனைத்து வியாபார சங்கங்களின் சம்மேளன தலைவரும், தமிழ்நாடு வர்த்தக சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவருமான த.சண்முகம், செயலாளர் வீரப்பன் மற்றும் நிர்வாகிகள், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமை சந்தித்து புகார் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
கடலூர், பண்ருட்டி உள்ளிட்ட நகரங்களில் உள்ள கடைகளுக்கு திருநங்கைகள் கூட்டமாக செல்கின்றனர். பின்னர் அவர்கள், வியாபாரிகளிடம் ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம் தருமாறு தொந்தரவு செய்கிறார்கள். பணம் கொடுக்காத வியாபாரிகளை ஆபாச வார்த்தைகளால் திட்டி மிரட்டுகிறார்கள். மேலும் தங்களது ஆடைகளை களைந்து அருவெறுக்கத்தக்க வகையில் நடந்து கொள்கின்றனர்.
திருநங்கைகள் மீது நடவடிக்கை
இதனால் வியாபாரிகள் அனைவரும் மிகவும் மனம் நொந்து போய் உள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் பண்ருட்டியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா வியாபாரிகளையும், திருநங்கைகளையும் அழைத்து கூட்டம் நடத்தினார். கூட்டத்தில், வியாபாரிகளிடம் பணம் கேட்டு தொந்தர செய்ய மாட்டோம் என்று திருநங்கைகள் தெரிவித்தனர். ஆனால் தற்போது பண்ருட்டி உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தின் நகரங்களில் திருநங்கைகள் வியாபாரிகளிடம் தொந்தரவு செய்து வரும் நிகழ்வு நடந்து வருகிறது. எனவே திருநங்கைகள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.