புதிய ரக விதைகளை கண்டுபிடிக்க வேளாண் விஞ்ஞானிகள் மூலம் நடவடிக்கை-அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேச்சு
அதிக மகசூலை ஈட்ட புதிய ரக விதைகளை கண்டுபிடிக்க வேளாண் விஞ்ஞானிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.
அதிக மகசூலை ஈட்ட புதிய ரக விதைகளை கண்டுபிடிக்க வேளாண் விஞ்ஞானிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.
கருத்தரங்கம்
வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில் வேளாண்மை உட்கட்டமைப்பு நிதியின் கீழ் கடன்வசதி பெறும் திட்டம் குறித்த மாநில அளவிலான கருத்தரங்கம் திருச்சியில் ஒரு ஓட்டலில் நேற்று நடந்தது. அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அன்பில்மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் குத்துவிளக்கேற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார்கள்.
நிகழ்ச்சியில் அரசு செயலாளர் மற்றும் வேளாண் உற்பத்தி ஆணையர் சமயமூர்த்தி, வேளாண் வணிகத்துறை இயக்குனர் நடராஜன், மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சக இணைச்செயலாளர் சாமுவேல் பிரவீன்குமார், தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி தலைமை பொதுமேலாளர் வெங்கடகிருஷ்ணா, தஞ்சை தேசிய உணவு தொழில்நுட்ப மேலாண்மை இயக்குனர் லோகநாதன், மேயர் அன்பழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கருத்தரங்கில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
ரூ.2 கோடி வரை கடன்
வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் 12 ஆண்டிற்கு தமிழ்நாட்டிற்கு ரூ.5,990 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம் 15 முதல் 20 சதவீதம் வரை அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்புகளை குறைக்க முடியும். இத்திட்டத்தின் மூலம் தொடக்க வேளாண்மை கடன் சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், தொழில் முனைவோர்கள் ஆகியோர் பயன்பெறலாம்.
இந்த திட்டத்தில் தனி நபரோ அல்லது நிறுவனமோ அதிகபட்சமாக ரூ.2 கோடி வரை 3 சதவீதம் வட்டி குறைப்புடன் கடன் பெறலாம். கட்சியை தக்க வைப்பதற்காக எடப்பாடி பழனிசாமி வேளாண் துறையின் செயல்பாடுகள் குறித்து நாகரிகமற்ற வார்த்தைகளை பயன்படுத்தி பொய்யான வெற்று அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். நல்ல விதைகளை பயன்படுத்தி அதிக மகசூலை ஈட்டுங்கள் என நாங்கள் விவசாயிகளுக்கு தெரிவித்து வருகிறோம்.
புதிய ரக விதைகள்
அதற்காக புதிய ரக விதைகளை கண்டுபிடிக்கும் பணி வேளாண் விஞ்ஞானிகள் மூலம் நடைபெற்று வருகிறது. இதற்கான காலதாமதம் இயற்கையானது. ஆனால் கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் இந்த புதிய ரக விதைகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்கான முயற்சியிலும் அவர்கள் ஈடுபடவில்லை.
இவ்வாறு அவர் பேசினார். முடிவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் வேளாண் இணை இயக்குனர் உமாதேவி நன்றி கூறினார். கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை திருச்சி வேளாண் வணிக துணை இயக்குனர் சரவணன் செய்திருந்தார். கருத்தரங்கில் வேளாண் வணிகத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டு இருந்த வேளாண் கண்காட்சியை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
நடவடிக்கை
முன்னதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறும்போது, தமிழகத்தில் 20 சதவீத உரங்களை கூட்டுறவு சங்கங்கள் மூலமாக விற்பனை செய்கிறோம். கடந்த மாதம் ஒரே நேரத்தில் உரம் விற்பனை செய்யும் மையங்களில் ஆய்வு செய்து அதில் கூடுதல் விலைக்கு உரங்களை விற்பனை செய்த 126 மையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் நெல் கொள்முதல் நிலையங்களை பாதுகாக்க அ.தி.மு.க அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நமக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் கட்டிய ஒரு சில கிடங்குகளும் தரமானதாக இல்லை. தற்போது தி.மு.க அரசு அதனை சரி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறது என்றார்.