விதை சட்ட விதிகளை கடைபிடிக்காவிட்டால் நடவடிக்கை


விதை சட்ட விதிகளை கடைபிடிக்காவிட்டால் நடவடிக்கை
x

விதை சட்ட விதிகளை கடைபிடிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விற்பனையாளர்களுக்கு, அதிகாரி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

விதை சட்ட விதிகளை கடைபிடிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விற்பனையாளர்களுக்கு, அதிகாரி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

ஆலோசனை கூட்டம்

பொள்ளாச்சியில் விதை விற்பனையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், கோவை விதை ஆய்வு துணை இயக்குனர் வெங்கடாசலம் கலந்துகொண்டு பேசியபோது கூறியதாவது:-

அரசு மற்றும் தனியார் விதை விற்பனையாளர்கள் தரமான விதைகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். விதை கொள்முதல் செய்யப்பட்ட விவரங்களை உடனுக்குடன் விதை இருப்பு பதிவேட்டில் பட்டியல் எண்ணுடன் பதிவு செய்ய வேண்டும். உண்மை நிலை விதைகளில், அறிக்கை பெறாத பயிர் ரகங்களுக்கு விதை சான்று மற்றும் அங்கக சான்றுக்கு விண்ணப்பித்து பதிவு சான்றிதழ் பெறுவது அவசியம் ஆகும். விதை பகுப்பாய்வு முடிவுகள் மற்றும் பதிவு சான்றிதழ் கொண்ட விதை குவியல்களையே கட்டாயம் விற்பனை செய்ய வேண்டும்.

நடவடிக்கை

விதை ஆய்வாளர்கள் தங்கள் நிலையத்தில் ஆய்விற்கு வரும் போது பதிவு சான்றிதழ், குவியலுக்கான பகுப்பாய்வு முடிவுகள், கொள்முதல் பட்டியல் ஆகியவற்றை அவசியம் காண்பிக்க வேண்டும். தரத்தினை உறுதி செய்ய விதை ஆய்வாளர்கள் மாதிரிகள் சேகரிக்கும் போது உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும். விவசாயிகளின் விருப்பமான பயிர் ரகங்களை விற்பனை செய்ய வேண்டும். லாப நோக்கத்திற்காக விவசாயிகளுக்கு விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும். மேலும், விதைச்சட்டம் நடைமுறைகளை ஒவ்வொரு விற்பனையாளரும் கடைபிடிக்க வேண்டும். மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

விற்பனை ரசீது

விதை கொள்முதல் செய்யும் விவசாயிகள் தாங்கள் வாங்கும் விதைகளுக்கு கட்டாயம் விற்பனை ரசீது பெற்று கொள்ள வேண்டும். விற்பனை ரசீதில் பயிர் ரகம், குவியல் எண், காலாவதி நாள், விற்பனை நாள், விற்பனையாளர் கையெழுத்து ஆகியவை உள்ளதா என்று சரிபார்த்து பெற்று கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் விதை விற்பனையாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story