சிகரெட் லைட்டர் விற்பனையில் எடையளவு விதிகள் பின்பற்றாவிட்டால் நடவடிக்கை
சிகரெட் லைட்டர் விற்பனையில் எடையளவு விதிமுறை பின்பற்ற வேண்டும் எனவும் மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
சிகரெட் லைட்டர் விற்பனையில் எடையளவு விதிமுறை பின்பற்ற வேண்டும் எனவும் மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
திருவண்ணாமலை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வெளிநாடுகளில் இருந்து சிகரெட் லைட்டர்கள் இறக்குமதி செய்யப்படும் 7 நிறுவனங்களில் ஆய்வு நடந்தது.
திருவண்ணாமலை மாவட்டத்திலும் வாணியம்பாடி மற்றும் திருப்பத்தூரிலும் 7 நிறுவனங்களில் நடந்த இந்த ஆய்வில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் சாந்தி, ஆத்திப்பழம், சுபாஷ் சந்தர், மாலா, வெங்கடேஷ் ஆகியோர் ஈடுபட்டனர். சிகரெட் லைட்டர்கள் சட்டமுறை எடையளவு விதிகள் 2011-ஐ மீறுவது குறித்து நடந்த ஆய்வில் ஒரு நிறுவனத்தில் மட்டும் முரண்பாடு கண்டறியப்பட்டது. இதனையடுத்து அந்த நிறுவன உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.
இது குறித்து திருவண்ணாமலை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மீனாட்சி கூறுகையில், ''கடைகள் மற்றும் நிறுவனத்தின் உரிமையாளர்கள் விற்பனை செய்யப்படும் சிகரெட் லைட்டர்கள் சட்டமுறை எடையளவு விதிகள் 2011-ன் கீழ் உள்ள அறிவிக்கைகளுடன் உள்ளனவா என உறுதி செய்த பின்னர் விற்பனை செய்ய வேண்டும். ஆய்வு மேற்கொள்ளும் போது சட்டமுறை எடையளவு விதிகள் 2011-ஐ மீறுவது கண்டறியப்பட்டால் ஆபராதம் விதிக்கப்படும். மேலும் நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என்றார்.