தொழிலாளர் நலநிதி செலுத்தாவிட்டால் நடவடிக்கை:உதவி ஆணையர் எச்சரிக்கை
தொழிலாளர் நலநிதி செலுத்தாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உதவி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தேனி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு தொழிலாளர் நலநிதி சட்டம் 1972-ன் படி தொழிலாளர் நல வாரியம் அமைக்கப்பட்டு தொழிலாளர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொழிலாளர் நலநிதி சட்டம் பிரிவு 2 (டி) -ன் படி தொழிற்சாலைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், மலைத் தோட்ட நிறுவனங்கள், 5 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரியும் கடைகள் மற்றும் உணவு நிறுவனங்களில் பணிபுரியும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் தொழிலாளியின் பங்காக ரூ.20, ஒவ்வொரு தொழிலாளிக்கும் வேலை அளிப்பவர் பங்காக ரூ.40 சேர்த்து மொத்தம் ரூ.60 தொழிலாளர் நல நிதி பங்கு தொகையாக நிர்வாகம் செலுத்த வேண்டும்.
அதன்படி 2022-ம் ஆண்டுக்கான தொழிலாளர் நல நிதியை அடுத்த மாதம் (ஜனவரி) 31-ந்தேதிக்குள் வாரியத்துக்கு செலுத்த வேண்டும். ஆண்டில் 30 நாட்களுக்கு மேல் பணிபுரிந்த அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் நலநிதி செலுத்த வேலை அளிப்பவர் கடமைப்பட்டவர் ஆவார். தொழிலாளர் நலநிதி செலுத்த தவறினால் தமிழ்நாடு தொழிலாளர் நலநிதி சட்டம் 28-ன் படி வருவாய் வரி வசூல் சட்டத்தின் கீழ் அத்தொகை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும். எனவே 2022-ம் ஆண்டுக்கான தொழிலாளர் நலநிதி தொகையினை 'செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், டி.எம்.எஸ். வளாகம், தேனாம்பேட்டை, சென்னை-600006' என்ற முகவரிக்கு வங்கி வரைவோலை அல்லது காசோலையாக அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.