கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் பகுதிகளில்கழிவுநீர் அகற்றும் வாகனங்களை உரிமம் இன்றி இயக்கினால் நடவடிக்கைஆணையாளர்கள் குமரன், கீதா எச்சரிக்கை
கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் பகுதிகளில் கழிவுநீர் அகற்றும் வாகனங்களை உரிமம் இன்றி இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையாளர்கள் குமரன், கீதா ஆகியோர் எச்சரித்துள்ளனர்.
திருக்கோவிலூர்
நகராட்சி உரிமம்
கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் நச்சுத்தொட்டி சுத்தம் செய்தல் மற்றும் பராமரித்தலின் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை கழிவுநீர் வாகன உரிமையாளர்கள் சரியான முறையில் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். கழிவுநீர் வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனத்தில் அனைத்து வித பாதுகாப்பு இன்சூரன்ஸ், விபத்து காப்பீடு, பணியாளர் மருத்துவ சான்றிதழ், ஓட்டுநர் உரிமம் பயன்பாட்டில் உள்ளவாறு அரசு விதிகளின் படி புதுப்பித்திருக்க வேண்டும். நகராட்சி கழிவுநீர் வாகன உரிமையாளர்கள் தங்களது வாகன விவரத்தை கண்டிப்பாக பதிவு செய்து நகராட்சியில் உரிமம் பெற்றிருக்க வேண்டும். பதிவு செய்ய 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேவையான ஆவணங்களுடன் ரூ.2 ஆயிரம் செலுத்தி வாகன உரிமம் பெற்று, அதன் நகலை வாகனத்தின் முகப்பில் ஒட்டியிருக்க வேண்டும். மேலும் கழிவுநீர் வாகனங்களை உரிமம் இன்றி இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கிரிமினல் வழக்கு
கழிவுநீரை உளுந்தூர்பேட்டை மற்றும் திருவண்ணாமலை சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு சென்று கொடுத்து உரிய ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு செல்லாமல் நீர்நிலைகள் மற்றும் பொது இடங்களில் கொட்டும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மேற்கண்ட கழிவுநீர் வாகனங்கள் ஜி.பி.எஸ். கருவி மூலம் கண்காணிக்கப்படும். கட்டிட உரிமையாளர்கள் தங்களது கட்டிடத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கு மனிதர்களை பயன்படுத்தாமல் நவீன ரக கழிவுநீர் வாகனங்கள் மூலமாக சுத்தம் செய்ய வேண்டும். தங்களது கட்டிடங்களை கழிவுநீர் தொட்டி நிறைந்து இருந்தாலும் உடனடியாக அவற்றை சுத்தம் செய்ய வேண்டும். அதை பின்பற்றாமல் ஏதேனும் அசாதாரமான விபத்துகள் நிகழ்ந்தால் அதற்கு அந்த கட்டிட உரிமையாளரே முழு பொறுப்பு. அவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்படும். அதற்கான நஷ்ட ஈடு இழப்புகள் அனைத்தும் அந்த கட்டிட உரிமையாளர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்படும் என எச்சரிக்கப்படுகிறது. மேற்கண்ட தகவல் நகராட்சி ஆணையாளர்கள் கள்ளக்குறிச்சி குமரன், திருக்கோவிலூர் கீதா ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.