ரூ.1000 வழங்கும் திட்டத்தில் அரசியல் கட்சியினரிடம் விண்ணப்பங்கள் வழங்கினால் நடவடிக்கை


ரூ.1000 வழங்கும் திட்டத்தில் அரசியல் கட்சியினரிடம் விண்ணப்பங்கள் வழங்கினால் நடவடிக்கை
x
தினத்தந்தி 8 July 2023 5:49 PM IST (Updated: 9 July 2023 4:27 PM IST)
t-max-icont-min-icon

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்குவதற்கான திட்ட விண்ணப்பங்களை அரசியல் கட்சியனரிடம் அதிகாரிகள் வழங்கக்கூடாது என கலெக்டர் கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்குவதற்கான திட்ட விண்ணப்பங்களை அரசியல் கட்சியனரிடம் அதிகாரிகள் வழங்கக்கூடாது என கலெக்டர் கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.

ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின்படி ரேஷன் அட்டைதாரர்களின் விண்ணப்பங்களை பதிவு செய்திட சிறப்பு முகாம் நடத்துவது குறித்து துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்ற ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடந்தது.

கூட்டத்துக்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது :-

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இத்திட்டத்தில் தகுதியுள்ள குடும்பத் தலைவிகள் பயன்பெறும் விதமாக தகுதி உள்ள பயனாளிகளை தேர்வு செய்ய முதற்கட்ட முகாம் ஜூலை 20 அல்லது 24-ந் தேதி தொடங்கப்பட உள்ளது. முகாமானது தொடர்ந்து 10 நாட்கள் நடத்தப்படும்.

இதில் முதல் 8 நாட்கள் விண்ணப்பங்களை பதிவு செய்திடவும், கடைசி 2 நாட்கள் சந்தேகம் உள்ள விண்ணப்பங்களை நேரடி கள ஆய்வு செய்து அவற்றை உறுதி செய்ய துறைச் சார்ந்த அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 614 நியாய விலை கடைகள் இயங்கி வருகிறது. இந்த நியாய விலை கடைகளின் கீழ் அரசின் விதிமுறைகளை பின்பற்றி தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கிட தேர்வு செய்ய வேண்டும்.

முகாம் தொடங்கப்படும் நாட்களில் பயோமெட்ரிக் எந்திரம் மூலம் பதிவு செய்து விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். இப்பணிகளில் இல்லம் தேடி பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் வரும் புதன்கிழமையிலிருந்து தொடங்கப்பட உள்ளது.

நடவடிக்கை

எக்காரணம் கொண்டும் விண்ணப்பங்கள் எந்த ஒரு அரசியல் கட்சியினரிடமோ, முக்கிய பிரமுகர்களிடமோ, ஒட்டுமொத்தமாகவோ அல்லது தெரிந்தவர்களிடமோ வழங்கிடுவது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட அலுவலர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆகவே அசல் விண்ணப்பங்கள் குடும்ப அட்டைதாரர்களிடம் மட்டுமே வழங்கப்பட வேண்டும். அனைவருக்கும் விண்ணப்பங்கள் பாரபட்சமின்றி வழங்குவதை உறுதி செய்திட இந்த நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.

தகுதியின் அடிப்படையில் அவர்களுக்கு வழங்கப்படுவது குறித்தும், வழங்கப்படாதது குறித்தும் செல்போன் வாயிலாக குறுஞ்செய்தி அனுப்பப்படும். தகுதி வாய்ந்த அனைத்து நபர்களும் இத்திட்டத்தில் பயன்பெற வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, மகளிர் திட்ட இயக்குனர் ரவிச்சந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முரளி, மாவட்ட வழங்கல் அலுவலர் சத்தியபிரசாத் மற்றும் வருவாய்த்துறையினர், ஊரக வளர்ச்சித் துறையினர், நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



Next Story