ஆதிதிராவிட மாணவர் விடுதிகளில் உணவு தரமாக இல்லாவிட்டால் நடவடிக்கை
ஆதிதிராவிட மாணவர் விடுதிகளில் உணவு தரமாக இல்லாவிட்டால் நடவடிக்கை
ஆதிதிராவிட மாணவர் விடுதிகளில் உணவு தரமாக இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கூறினார்.
ஆய்வு
தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் தாட்கோ மூலம் ரூ.1 கோடியே 26 லட்சம் மதிப்பில் மாணவிகள் விடுதி கட்டப்பட்டு வருகிறது. இந்த பணியை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தஞ்சை அம்பேத்கர் பள்ளி மாணவர்கள் விடுதியும், குந்தவை நாச்சியார் கல்லூரியில் மாணவியர் விடுதியும் ஆய்வு செய்யப்பட்டது. குந்தவை நாச்சியார் கல்லூரி மாணவியர் விடுதி 80 பேர் தங்கும் அளவுக்கு கட்டப்பட்டு வருகிறது. மாணவர்கள் குறைவாக உள்ள அரசு பள்ளி மாணவர்கள் விடுதியில், கல்லுாரி மாணவர்களும் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
நடவடிக்கை
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நாளை(அதாவது இன்று) தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களை உள்ளடக்கிய துறைசார்ந்த ஆய்வுக்கூட்டம் நடக்கிறது. முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்ற பிறகு தமிழகம் முழுவதும் உள்ள 336 விடுதிகளுக்கு கடந்த ஆண்டு ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக ரூ.50 ஆயிரம் வரை பெற்று விடுதிகளின் கழிவறை, சுற்றுச்சுவர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுவாக ஆய்வுக்கு செல்வது பற்றி யாருக்கும் சொல்வது கிடையாது. திடீரென சென்று தான் ஆய்வு மேற்கொள்வோம். மாணவியர் விடுதியில் நான் உணவு சாப்பிட்டு பார்த்தேன். உணவு நன்றாக இருந்தது. ஆதிதிராவிடர் நல மாணவ, மாணவிகள் விடுதிகளில் உணவுகள் தரமாக இல்லை என புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். தட்கல் மூலம் 1,837 ஆதிதிராவிட விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது.
வேங்கைவயல் சம்பவம்
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் சம்பவத்தில் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். மேலும் சி.பி.சி.ஐ.டி. விசாரணையும், நீதிபதி சத்தியநாராயணன் விசாரணையும் நடந்து வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி திரவுபதி அம்மன் கோவில் பிரச்சினை தொடர்பாக மாவட்ட கலெக்டர் தலைமையில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் உடன்பாடு எட்டப்படவில்லை என்பதால், கோவில் பூட்டப்பட்டுள்ளது. விரைவில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் இலக்கியா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.